கரிகாலன் அல்லது கரிகால சோழன் வரலாறு Karikala Chola in Tamil
கரிகாலன் திருச்சிக்கு அருகாமையில் உள்ள உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுக நகரமாக திகழ்ந்தது. இவர் உழவுத் தொழிலை ஊக்குவித்து பல நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தினார். உழவுத் தொழிலில் ஊக்குவித்தது போன்று கைத்தொழில்களையும் ஆதரித்தார். நடனக்கலையை போற்றினார். இவரது ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் நகர பொருளாதாரமாக வலுப்பெறத் தொடங்கியது. சுருங்கக்கூறின் கரிகாலன் தொலைநோக்குடன் சிந்தித்து சோழர்களின் ஒப்பற்ற அரசராக விளங்கினார்.
இவனுடைய தந்தை இளஞ்சேட்சென்னி உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டான். சிறுவயதில் இவன் தனக்குரிய அரசினை இழந்து தன் மாமனாகிய இரும்பிடர்த்தலையார் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்தான் என்று அறிகிறோம். இளமைக்காலத்தில் இவன் உறவினர்கள் கரிகாலனை சிறையிலிட்டு நெருப்பு வைத்தனர். இந்நெருப்பில் இருந்து தப்பி குறித்து ஓடியபோது கால் கரிந்துவிடவே கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். சிலர் கரிகாலன் என்ற பெயரை கரி+ காலன் என்று பிரித்து யானைகளுக்கு காலன் எனவும் பொருள் கூறுவர். கரிகாலனைக் கலிகாலன் என்றாகி கலிப்பகைக்குக் காலன் என்றும் கூறுவர். ஆயின் இவை எல்லாம் ஏற்புடையதன்று. கரிந்த காலினை உடையவன் என்பதே பொருந்திய பொருளாகும். " காய்ச்சின மெய்ம்பிற பெரும் பெயர்க் கரிகால்", " கலிகொள் சுற்றமோடு கரிகால் காண" எனவரும் அகநானூற்றுப் பாடல் வரிகளில் அவன் பெயர் ' அன்' விகுதி பெறாமல் "கரிகால்" என்றே வழங்கப்படுவது இதனை வலியுறுத்தும்.
கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றவன் இவன் என்பதை ' தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி' என்று பெருநராற்றுப்படை கூறும். இவனுக்குப் பல குழந்தைகள் இருந்தனர் என்பதை ' பொதொடி புதல்வர் ஓடி ஆடவும், என்ற பட்டினப்பாலை வரிகளால் அறியலாம். அம் மக்கள் யார் என்பது தெரியவில்லை. உறையூர் மணகிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இருவரும் இவனது புதல்வர் என்று இராகவையங்கார் கூற்று பலராம் ஏற்கப்படவில்லை.
பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் இவனே. இந்நூலை இயற்றிய உத்திரங்கண்ணனார் கரிகாலனிடமிருந்து 16 லட்சம் பொற்காசு பெற்றதாக கூறுவர். சேரமன்னன் ஆட்டன் அத்தியின் மனைவி ஆதிமந்தி கரிகாலன் மகள் என்பர் இளங்கோவடிகள்.
கரிகாலன் போர்ப் பெருமை
வெண்ணிப் பறந்தலை போர்
இவன் ஒப்பற்ற வீரன். இவனுடைய போர்களில் வெண்ணிப்போரும், வாகைப் பறந்தலைப் போரும் குறிப்பிடத்தக்கன. சேரனும் பாண்டியனும் வேளிர் ஒன்பதின்மரும் கூடி தஞ்சாவூரின் அருகிலுள்ள கோயில்வெண்ணி என அழைக்கப்படும் வெண்ணி வாயில் என்னுமிடத்தில் கரிகாலனை எதிர்த்தனர். கரிகாலன் ஒருவனாகவே நின்று போரிட்டு வென்றான். இப்போரில் தான் புறப்புண் நாணிய பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து துணிந்தான். கரிகாலனின் வெற்றி சிறப்பினை பரணர், முடத்தாமக்கண்ணியார், மாமூலனார், காழத் தலையார், வெண்ணிக்குயத்தியார், போன்றோர் பாராட்டியுள்ளனர். இவனுடைய தாய் பிறந்த அழுந்தூரில் வெற்றிவிழாவை கொண்டாடினான். கரிகாலனின் வெண்ணிப் போர் வெற்றி அவரது அரச வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இவற்றின் மூலமாக அவரது அரியணை வலுப்பெற்றது. கரிகாலன் பிற மன்னர்களின் மதிப்பைப் பெற்றார். வெண்ணிப் போரில் இருந்து கரிகாலனின் புகழ் உலகெங்கும் பரவியது.
வாகைப் பறந்தலை போர்
கரிகாலனுடன் போரிட்டுத் தோற்ற ஒன்பது வேளிரும் வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் மீண்டும் போரிட்டனர். இப்போரிலும் கரிகாலனே வென்றான். வேளிர் நமது முரசு, குடை போன்றவற்றைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு ஓடினர். வடக்கே இருந்த அருவாளரும் தெற்கே இருந்த ஒளிரும் இவன் ஆட்சிக்குட்பட்டனர். தோற்றுப்போன கூட்டுப்படை கரிகாலனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். இப்போரின் வெற்றியை கண்டு எஞ்சிய பிற குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் சோழ மன்னனின் ஆட்சியை ஏற்றுக் கொண்டு அவனது ஆட்சியின் கீழ் வந்தனர். இருங்கோவேலின் பரம்பரை இருந்த இடம் தெரியாமல் போயிற்று. இப்போர்களின் விளைவாக கரிகாலனின் ஆட்சிப்பரப்பு மேலும் விரிவடைந்து. தமிழகம் முழுவதும் கரிகாலனின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இமயப் படையெடுப்பு
கரிகாலன் தனது ஆட்சியை இமயம் வரை விரிவாக்க எண்ணி இமயம் நோக்கி படை எடுத்தார். கரிகாலன் கரையோரமாகச் சென்று வச்சர, மகத, அவந்தி, மன்னர்கள் கரிகாலனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு பரிசாக முத்துப் பந்தல், பட்டி மண்டபம், தோரணவாயில் ஆகியவற்றை கொடுத்து பெருமைப்படுத்தினார். கரிகாலனின் இமயமலை படையெடுப்பு பற்றி சிலப்பதிகாரம் மட்டுமே கூறுகின்றது. இப்படையெடுப்பைப் உறுதி செய்ய வேறு எந்த வட இந்திய ஆவணமும் கிடைக்கவில்லை.
இலங்கைப் படையெடுப்பு
கரிகாலன் மிக பலமான கடற்படையை கொண்டிருந்தார். கடல் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பிய கரிகாலன் இலங்கை மீது படையெடுத்தார். இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இப் போர் கைதிகளை கொண்டு காவிரிக்கு கரை எழுப்பினார்.
கரிகாலன் கட்டிய கல்லணை
கரிகாலன் கட்டிய கல்லணை உலகிலேயே மிகப்பழைய நீரை தேக்கும் கற்கட்டுமானம். இதன் நோக்கம் தஞ்சை டெல்டா நிலப்பகுதி முழுவதற்கும் நீர்ப்பாசன வசதி நிரந்தரமாக கொடுக்கவேண்டும் என்பதே. இது ஒரு பெரிய நீர் தேக்க அணை. நன்கு செதுக்கப்படாத கற்களால் கட்டப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் கட்டப்பட்ட இந்த அணை வாய்க்கால் இணைக்கப்பட்டது. இதன் விளைவாக கரிகாலன் பொன்னிக்குக் கரைகண்ட பூபதி என்று போற்றப்பட்டார். கரிகாலன் கட்டிய கல்லணை யார் புன்செய் நிலங்களும் பாசன பகுதியாக்கப்பட்டது. இதுவே தமிழகத்தின் வளமிக்க விவசாய பொருளாதாரத்தை உருவாக்க காரணமாகியது.
நீதியும் நேர்மையும் நிறைந்த ஆட்சி நடத்தினான். தொண்டை மண்டலம் வரை அக்காலத்தில் அடர்ந்திருந்த காடுகளை அழித்து நாடாக்கினான். காவிரியின் குறுக்கே கல்லணையை கட்டிச் சோழநாட்டை வளப்படுத்தினான். சிங்கள தீவை இவன் வென்றபோது பிடித்துவந்து கைதிகளை கொண்டு அணை கட்டும் பணியில் ஈடுபடுத்தினார் இவனுடைய ஆட்சிக்காலம் பொற்காலமாக அமைந்தது எனலாம்.