சிவகங்கை சீமை வரலாறு கிபி 1710 முதல் கிபி 1801 வரை : Sivagangai Seemai History in Tamil
சிவகங்கை சீமை வரலாறு கிபி 1710 முதல் கிபி 1801 வரை
சிவகங்கை, மதுரை நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், இராமநாதபுரம் சேதுபதியின் ஒரு பகுதியாக இருந்தது. இராமநாதபுரம் சேதுபதி, கிழவன் சேதுபதி என்பவர் இருக்கும் வரையில், சிவகங்கை என்பது தனியாக ஏற்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகு ஏகப்பட்ட வாரிசுரிமை போட்டிகள் ஏற்பட்டன. அதனால் சிவகங்கை, இராமநாதபுரத்திலிருந்து தனி சீமையாக பிரிய ஆரம்பித்தது.
இராமநாதபுரம் சேதுபதியாக முத்து விஜய ரகுநாத சேதுபதி', கிபி 1710 லிருந்து 1728 வரை ஆட்சி செய்தார். இவருடைய காலத்தில்தான் சிவகங்கை சீமை தோன்றியது. இவர் தன்னுடைய ஆட்சியின்போது இராமநாதபுரம் சேது நாட்டை 8 வருவாய் பகுதிகளாகவும், 72 இராணுவ பிரிவுகளாகவும் பிரித்தார். பிறகு அவைகளுக்கு நாட்டுத் தலைவர்களையும், பாளையக்காரர்களையும், ஊரக பணியாளர்களையும் நியமித்தார். அப்போது சேதுபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. பவானி சங்கரதேவர் என்பவர் முத்து விஜயரகுநாத சேதுபதி படம் சூடியது எதிர்த்து கலகம் செய்தார். ஆகவே, இராமநாதபுரம் சேதுபதி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில், மானாமதுரை, திருபுவனம், படைமாத்தூர், பாகனேரி சக்கந்தி, திருப்பத்தூர், காளையார்கோவில், நாலுகோட்டை, மல்லாக்கோட்டை என்பவைகள் சிவகங்கை சீமை அகற்றப்பட்டது.
சிவகங்கை சீமையின் முதல் மன்னர்
சிவகங்கை சீமையின் முதல் மன்னர் 'சசிவர்ணத் தேவர்' ஆவார். இவருக்கு அரசு, நிலையிட்ட விஜயரகுநாதத் சசிவர்ண பெரிய உடையத் தேவர் என்ற பட்டப் பெயருமுண்டு. இவர் கிபி 1729 இல் இருந்து 1749 வரை ஆட்சி செய்தார். இவர் பல நன்கொடைகள் அளித்துள்ளார்.
முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்
இவர் சிவகங்கையின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பட்டயம், இவர் ' தொண்டித் துறைமுகம் மற்றும் தனுஷ்கோடியின் காவலன்' என்றும், 'செம்பு வளநாடன்' என்றும் கூறுகிறது. இவருடைய தளபதிகள், வன்னி நகராதிபன்' என்றும் சின்னப்பன் சேர்வை, முத்துவீரப்பன் சேர்வைக்காரர்கள் ஆவார். இவர் திருபூவன அவதானியாருக்கு, 'அம்பலத்தாடி' என்ற கிராமத்தை தானமாக வழங்கினார்.
இவருடைய காலத்தில் பல போர்கள் நடைபெற்றன. தஞ்சை மன்னர் மராத்திய பிரதாப் சிங், அனுமந்தகுடி என்ற இவர்களது பகுதியை ஆக்கிரமித்தார். எனவே, அவருடன் போர்புரிந்து விரட்டிவிட்டார்.
மைசூர் மன்னர் திவான் நஞ்ச ராஜா, மதுரையைக் கைப்பற்றி, 'கூப் சாகிப்' என்ற தளபதியின் கையில் மதுரையை ஒப்படைத்தார். அது மதுரைக்கு பெரும் அறிவை ஏற்படுத்தியது. இந்த நிலையை அறிந்த சிவகங்கை மன்னர்கள், தங்கள் படைவீரர்களை அனுப்பி, கூப் சாகிப்பை விரட்டி விட்டனர். பிறகு அவர்கள் மதுரை நாயக்க வாரிசு பங்காரு திருமலை நாயக்கரின் மகனான, ' விஜய குமாரனுக்கு' மதுரை அரசனாக முடிசூட்டினார்.
முத்து வடுகநாதர், அப்போது கர்நாடக நவாப் பதவிக்குப் போட்டியிட்டு கொண்டிருந்த முகமது அலிக்கும், சந்தாசாகிப் புக்குமிடையே போட்டியில் சந்தாசாகிப் ஆதரித்தார்.
தஞ்சை அரசர்களும், நவாபும், மறவர் சீமைகள் தங்களுக்கு உரியவைகள் என்று அதிகாரம் செலுத்தினர். முகமது அலி நவாப் ஆங்கிலேயர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களின் படை உதவியுடன், சிவகங்கை சீமையைத் தாக்கினர். இது சிவகங்கை சீமையில் முதல் தன்மான போராக இருந்தது. சிவகங்கையின் முக்கிய நகரம் காளையார் கோயில் கைப்பற்றப்பட்டது. முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்.
ஆற்காடு நவாபின் ஆட்சியின் சிவகங்கை
இந்த வெற்றிக்குப் பிறகு, சிவகங்கை ஆற்காடு நவாபின் வசமாயிற்று. சிவகங்கையில், நவாபிற்காக ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது. அதில், முகமது அலி நவாபின் மூத்த மகன் உம்தத்- உல்- உம்ரா தங்கியிருந்தார். அவர் சிவகங்கை சீமையில் நவாபின் நேர் பிரதிநிதியாக செயல்பட்டார். இவர்கள் சிவகங்கையை, 'ஹுஸைன் நகர்' என்றும், இராமநாதபுரத்தை ' அலி நகர்' என்று மாற்றினார்.
இவர்கள், நிர்வாகத்தை பாரசீக மொழியில் செய்தனர். கடிதங்கள் 'ஹிஜிரி' ஆண்டையும், சர்க்கார் வரவு செலவு கணக்கில் 'பசலி' முறையையும் கொண்டுவந்தனர். இவர்கள், நிலங்களை தங்களது ஆதரவாளர்களுக்கு 'கவுல் காணி' என்ற பெயரில் வழங்கினர். மேலும், முன்பு புழக்கத்திலிருந்த மின்னல் பணம், சுழிப்பணம், சழிச் சக்கரம் மற்றும் டச்சுக்காரர்களின் போர்டோ நோவா, பகோடா போன்ற நாணயங்கள் மதிப்பிலான. அதற்குப் பதிலாக, ஆற்காட்டு வெள்ளி ரூபாய் புழக்கத்தில் வந்தது. ஊர்த் தலைவர்கள், ஊர் சபைகளை கலைத்து விட்டனர். நவாபின் அலுவலர்களான அமில்தார்கள், குற்றங்களுக்கு அபராதமும் தண்டனையும் அளிக்கும் நீதிபதிகளாக மாறினர். மேலும் தலக்காவல், தேசக்காவல் முறைகளை அகற்றிவிட்டு, ஊர்களுக்கு புதிய காவலர்களை நியமித்தனர்.
பேஷ்குஷ்
தென்னகத்தில் நிலைத்து இருந்த பாரம்பரிய அரசுகளான திருவாரூர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் போன்றவைகள் முகலாயப் பேரரசின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. பிறகு 'தென்னாட்டு பிரதிநிதி' என்ற முறையில் ஆற்காடு நவாபை மதித்து, அவருக்கு வழங்கிய கண்ணியமான அன்பளிப்புத் தொகையை ஆண்டு 'பேஷ்குஷ் தொகை' என்பதாகும். அந்தந்த அரசுகளின் வருவாய்களின் பேரில் அது செலுத்தப்பட்டது. கிபி 1785 லிலும், கிபி 1787 லிலும் நவாபும், கம்பெனியாரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை கம்பெனியார் பெற்றிருந்தனர். இதனடிப்படையில் கம்பெனி, உண்மையான ஆட்சி செய்தனர். இதனால் இராமநாதபுரம் சீமை, புதுக்கோட்டை தொண்டைமான் ஆகியோர் களிடையே கலவர சூழ்நிலை ஏற்பட்டது.
வேலு நாச்சியாரின் ஆட்சி
இவர் முத்துவடுகநாதர் மனைவியாவார். நவாபுகள் சிவகங்கையைப் பிடித்த பிறகு, அங்கிருந்து தப்பி திண்டுக்கல் விருப்பாட்சியில், ஹைதர் அலி ஆதரவுடன் தங்கியிருந்தார். பின்பு, ஹைதர் அலியின் படைகளுடன் சிவகங்கையில் கடுமையாக போர் செய்து சிவகங்கையை மீட்டார். இவர் மருது சகோதரர்களை சிவகங்கை சீமையின் ' பிரதிநிதியாக' நியமனம் செய்தார். இவருடைய ஆட்சியில் பழைய வாழ்க்கை திரும்பியது. திருநெல்வேலியிலிருந்து துணிமணிகளும், மதுரையிலிருந்து தட்டுமுட்டு சாமான்களும், தஞ்சாவூரிலிருந்து நெல் முதலிய தானியங்களும் கொண்டுவரப்பட்டன.
வேலுநாச்சியார் வீழ்ச்சி
கம்பெனி தளபதி இருவரின் தலைமையில் 29-4-1789ல், வேலு நாச்சியார் தாக்கப்பட்டார். மருது சகோதரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். மருது சகோதரர்கள் 5 மாதத்திற்கு பிறகு, மீண்டும் திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றினர். பிரிட்டிஷ்காரர்கள், ராணி வேலு நாச்சியாரை பதவியிலிருந்து (கிபி 1789 டிசம்பரில்) இறக்கினர். ராணி வேலு நாச்சியாருக்கு பதிலாக கிபி 1790ல் சக்கரவர்த்தி வேங்கன் பெரிய உடையத் தேவர், சிவகங்கை மன்னரானார். ஆனால் மருது சகோதரர்களே உண்மையில் ஆண்டனர்.
சக்கரவர்த்தி வேங்கன் பெரிய உடையத்தேவர்
இவரது ஆட்சி காலத்தில், பாளையக்காரர்கள் அதிருப்தியான நிலையில் இருந்தனர். கிபி 1792 மே மாதம் இறுதியில், ' சிவகிரி பாளையக்காரர்' சின்னத்தம்பி வரகுண வன்னயன், பக்கத்துப் பாளையமான சேத்தூர் பாளையத்தை ஆக்கிரமித்தார். எனவே கம்பெனியர் அவரை கைது செய்து காவலில் வைத்தனர். அவரது வாழ உரிமை பறிபோனது. மேலும் இராமநாதபுர சேதுபதி முத்துராமலிங்க சேதுபதியை கம்பெனி கைது செய்து காவலில் அடைத்தது. கலெக்டர் ஜாக்சனுக்குப் பதிலாக, லூசஷிங்டன் பொறுப்பேற்றார். இவரது காலத்தில், பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மு நாயக்கர் மருது சகோதரர்களை சந்தித்தார். ஆகையால் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களின் கவனிப்பிற்கு உள்ளானார்கள்.
ஆனால் பாளையக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகள், மருது சகோதரர்களையும், மற்ற பாளையக்காரர்களையும் ஒன்று சேர்க்க வைத்தது. இதன் மூலம் சிவகங்கை கம்பெனியின் எதிர்ப்பு கலமாகமாறியது. திண்டுக்கல் கோட்டையில் ரகசியமாக கூடினர். இதற்கிடையில், ஊமைத்துரையும், அவருடைய தோழர்களும் தப்பி சிவகங்கை வந்தனர். 'அக்கினியூ' என்ற படைத்தளபதி மறவர் சீமை கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்க கம்பியின் தலைமையை ஏற்றார். செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் (கிபி 1801) மருது படைகள் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து தோல்வி அடைந்தனர். மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு. கிபி 24-10-1801 அன்று காலையில் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். சிவகங்கையின் கடைசி மன்னர் வேங்கன் பெரிய உடையத் தேவர் பினாங்கு கடத்தப்பட்டார்.
இதற்குப் பிறகு சிவகங்கையில் மன்னராட்சி முறை ஒழிந்தது. ' ஜமீன்தாரி ஆட்சி 'முறை ஏற்பட்டது. இதன் ' ஜமீன்தார் கௌரி வல்லப ஒய்யா தேவர்' ஆவார். கிபி 3-9-1801ம் தேதியன்று, அவர் சிவகங்கை ஜமீன் ஆனார். மக்கள் போராடக் கூடாது என்பதற்காக, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருபுவனம், திருப்பத்தூர், மானாமதுரை, பார்த்திபனூர், பிரான்மலை, ஆனந்தக்குடி, சூரக்குடி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் இருந்த கோட்டைகள் இடித்து அழிக்கப்பட்டன.