காஞ்சிபுரம் மாவட்டம் Kanchipuram in Tamil Language

காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இது பழங்காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக விளங்குகிறது. காஞ்சிபுரம் தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும்  பேணி வளர்க்கும் ஒரு அற்புதமான நகரமாகும் இங்கு பல அற்புதமான கோயில்களும், மாமல்லபுரம் குகை கோயிலும்,  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும்,  வேதகிரீஸ்வரர் ஆலயம் உள்ள திருக்கழுக்குன்றம்,  சுயம்பு வடிவான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,  ஏகாம்பரநாதர் கோவில்,  வைகுந்த பெருமாள் கோவில்,  கைலாசநாதர் கோவில்,  வரதராஜ பெருமாள் கோவில்,  காமாட்சி அம்மன் கோவில்,   மற்றும் முக்தீஸ்வரர் கோவில் போன்ற பழமையான கோயில்கள் நிறைந்த நகரம் காஞ்சிபுரம்.

 கிபி 1968  ஜூலை 6ம் தேதி இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இதன் தலைநகரம் காஞ்சிபுரம்.  இது பல்லவர் காலத்தில் பல்லவப்  பேரரசின் தலைநகராக விளங்கியது. முதலில் செங்கை எம்ஜிஆர் மாவட்டம் எனவும்,  பின்னர் செங்கை அண்ணா மாவட்டம் என மாறி அழைக்கப்பட்டு,  தற்போது  காஞ்சிபுரம் மாவட்டம் எனப் பெயர் பெற்றுள்ளது.

 தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க,  ஒரு பழம் பெரும் நகரம் காஞ்சிபுரம் ஆகும்.  கச்சிப்பேடு, கச்சி காஞ்சி என்ற  பெயர்களும் இதற்கு உள்ளன.  வேகவதி ஆற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் வரலாறு Kanchipuram History in Tamil

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காஞ்சிபுரம் ஒரு சிறந்த நகரமாக விளங்குகிறது.  கி-மு இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி என்பவரால் இயற்றப்பட்ட மஹா பாஸ்ய  என்ற நூல்,  சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை,  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகளை ஆகியவை காஞ்சிபுரம் நகரை குறிப்பிடுகின்றன.   குப்தர்   காலத்தில் வாழ்ந்த வராகமிகிரர்,  சீன யாத்திரிகர் யுவான் சுவாங்   போன்றோர்  குறிப்பிடும் 'திராவிடத்தின்' தலைநகரமாக  காஞ்சிபுரம் விளங்கிற்று.  'நகரங்களிலேயே மிகச் சிறந்தது' என்று காளிதாசர் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சங்க காலத்தில் கரிகால் சோழனின் ஆட்சிப் பகுதியாக காஞ்சி இருந்தது.  கரிகாலனின்  மகன்  தொண்டைமான் இளந்திரையன் காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தை (தற்கால சென்னை,  செங்கல்பட்டு மாவட்டங்கள், வட,  தென் ஆற்காடு மாவட்டங்களின் பகுதிகள் அடங்கியது)  கிபி இரண்டாம் நூற்றாண்டில்  ஆட்சி புரிந்தார்  எனப்படுகிறது.

 காஞ்சியில் பல்லவர் ஆட்சி

 தென்னிந்தியாவில் ஆட்சிபுரிந்த சிறப்பு மிக்க அரச வம்சங்களில் பல்லவ வம்சம் ஒன்றாகும்.  கிபி 275ல்  இவர்கள் காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.  கிபி 875  வரை 6 நூற்றாண்டுகள்  காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது.  சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன்(கிபி 575 - 600)  களப்பிரர்களை தோற்கடித்து  காவிரி நதி வரை தமது ஆட்சியை நிறுவினர்.  சிம்மவிஷ்ணுவைத்,  தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் மகேந்திரவர்மன்,  முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி பெருமை மிக்கதாகும்.  தனது தந்தையையும்(மகேந்திரவர்மன்)  வட இந்திய பேரரசு (கிபி 607 - 647) ஹர்சரையும்  தோற்கடித்த மேரி சாளுக்கியர்கள் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து  'வாதாபி கொண்டான்'  என்ற சிறப்பு பெயரை முதலாம் நரசிம்மவர்மன்  பெற்றார்.

 சாளுக்கியர்களுடன் நடந்த போரில்  காஞ்சி பெரிதும் அழிவுற்றது.  இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராஜசிம்மன் ஆட்சி காலத்தில் காஞ்சி புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.  முதலாம் பரமேஸ்வரன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் பல்லவர் தலை நகர் காஞ்சி பிடித்தார்(கிபி 740).  ஆனால் பரமேஸ்வரன் தமது தலைநகரத்தை விரைவில்  கைப்பற்றினார்.

 பல்லவ மன்னர்கள் பலத்தக் கோட்டையை கட்டி தலைநகரமான காஞ்சியை பாதுகாத்தனர்.  சமண சமயத்தைத் தழுவி,   இச்சமயத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.  பல அழகிய ஆலயங்களைக் கட்டி இந்து சமயத்திற்கும் கலைக்கும் பெருமை தேடித் தந்தனர்.  முதலாம் நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சிக்காலத்தில் யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகர் இந்தியாவின் பல இடங்களுக்கு விஜயம் செய்த பொழுது (639 - 644)  காஞ்சிபுரத்திற்கு வந்தார்.  இவர் தமது குறிப்புகளில்  காஞ்சிபுரத்தின்  பெருமை பற்றி கூறியிருக்கிறார்.  காஞ்சிபுரம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சிறந்த நகரமாக இருந்தது என்றும்,  மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்றும்,  நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றும்,   கல்வி கற்பதில்  ஆர்வமுள்ளவர்கள் என்றும் புகழ்ந்து கூறியிருக்கிறார்.   காசிக்கு அடுத்து காஞ்சிபுரம் ஒரு சிறந்த கல்வித் ஸ்தலமாக விளங்கிற்று.  காஞ்சி 'கடிகா' வில் பயின்ற தர்மபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.

பல்லவர் ஆட்சிக்கு பின் காஞ்சி

 அபராஜிதன் என்ற கடைசி  பல்லவ  மன்னனை ஆதித்தன் (871 - 907)  என்ற  பிற்கால சோழ மன்னன் வென்ற பொழுது காஞ்சிபுரமும் பல்லவ நாடு பிற்கால சோழர் ஆட்சியின் கீழ் வந்தது.  தொண்டை நாடு ' ஜெயங்கொண்ட சோழ மண்டலம்'  என்ற பெயரைப் பெற்றது.  கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரம் பிற்கால சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.  சோழப்  பேரரசின் இரண்டாவது தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது.  சோழ மன்னர்களின் பாண்டிய மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்தனர்.  கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரம் விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.  கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதி வீரவசந்தராயர் தமது ஆட்சி பகுதிக்கு காஞ்சிபுரத்தை தலைமையிடமாக  கொண்டார்.  முகலாய   மன்னர் அவுரங்கசீப் காலத்தில்,  கர்நாடகத்தில் பல பகுதிகள்  வெல்லப்பட்டு அவை கர்நாடக நவாபின் ஆட்சியின் கீழ் வந்தன.  எனவே  ஆற்காட்டில்  நவாபின் ஆட்சியின் கீழ்  காஞ்சிபுரம் சிறிது காலம் இருந்தது.  கிபி 1760 காஞ்சிபுரத்தை ஆற்காடு நவாப்பின் இடமிருந்து ஆங்கிலேயர் பெற்றனர்.  இரண்டாவது மைசூர் போரின் பொழுது (1780) மைசூர் மன்னன் ஹைதர் அலி மேஜர் ஹெக்டர் மன்றோவைத்  தோற்கடித்து காஞ்சிபுரத்தை கைப்பற்றினார்.  ஆனால்,  போரின் இறுதியில் ஆங்கிலேயரை இந்நகரை வென்றனர்.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நகரமாக காஞ்சிபுரம்  விளங்கியது.  1968 ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமாக கொண்டு காஞ்சிபுரம் விளங்குகிறது.

 ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் 'துபாஷாக'  இருந்த பச்சையப்ப முதலியார் (1754-1794)   தமது பெருஞ்செல்வத்தை கல்விக்கும்,  கோவில் திருப்பணிக்கு செலவிட்டார்.  இவரது அறக்கட்டளை பல காஞ்சிபுரத்தில் உள்ளன.

 தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா (1909-1969)  பிறந்த ஊர் காஞ்சிபுரம் ஆகும்.  காஞ்சிபுரத்தில் இவர் வாழ்ந்த இல்லம் 1980  ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டுள்ளது.  இந்நாளில் பட்டு   நேச விற்கு காஞ்சிபுரம் புகழ்பெற்று விளங்குகிறது.

தொழிற்சாலைகள்

 கல்பாக்கம் அணுமின் நிலையம்,  தொல்பொருள் தொழிற்சாலை,  தோல் பதனிடுதல்,  கைத்தறி நெசவு,  பட்டு நெசவு,  ஹூண்டாய் கார் தொழிற்சாலை,  மகேந்திரா  போர்டு தொழிற்சாலை,  செயின்கோ பையின்  மிதவை கண்ணாடி தொழிற்சாலை.

 விவசாயம்

 ஏரிகள் மிகுந்துள்ள மைய்யால் " ஏரி மாவட்டம்"  எனப்படுகிறது.  ஏரிகள் எண்ணிக்கை 3,696.  புகழ்பெற்ற செம்பரம்பாக்கம்,  மதுராந்தகம் ஏரிகள் இங்கு உள்ளன.  நெல்,  கரும்பு,  நிலக்கடலை,  கேழ்வரகு,  காய்கறிகள் ஆகியவை விளைகின்றன.

 வழிபாட்டு இடங்கள்

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்,  காமாட்சி அம்மன் கோவில்,  ஏகாம்பரேஸ்வரர் கோவில்,  கைலாசநாதர் கோயில்,  குமரக்கோட்டம்,  மகாபலிபுரம்,  திருக்கழுக்குன்றம்,  உலகளந்த பெருமாள் கோயில்,  வல்லக்கோட்டை,  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில். 

 சுற்றுலாத் தளங்கள்

 காஞ்சிபுரம்,  வேடந்தாங்கல்,  திருக்கழுக்குன்றம்,  மகாபலிபுரம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா,  முட்டுக்காடு ஆகியவைகளாகும்.

  சிறப்புகள்

 காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்றது.  வேடந்தாங்கல் பறவைகள்   சரணாலயமும்,  மகாபலிபுரம் கல்வெட்டு சிற்பங்களும்,  காஞ்சிபுரம் புராதன கோயில்களும் சிறப்பு பெற்றவை.  உத்திரமேரூர் கல்வெட்டு,  சோழர் காலத்திய  குடவோலை தேர்தல் முறையை  விளக்குகிறது.   இவ்வூர் "ஏறி ஜில்லா" என புகழ் பெற்றது.

காஞ்சிபுரம் சுற்றுலா இடங்கள் Kanchipuram Tourist Places in Tamil

காஞ்சிபுரம் கோவில்கள் Kanchipuram Temples in Tamil

சைவம்,  வைணவம், ,  பௌத்தம், சமணம்,  ஆகிய நான்கு சமயங்களும் காஞ்சிபுரத்தின் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை பெற்றுள்ளன.  கிபி முதலாம் நூற்றாண்டில் காஞ்சியில் சிறப்புடன்  விளங்கிய பௌத்தம் பிற்காலத்தில் சிறப்பிலந்து .  சமணமும் வீழ்ச்சியுற்ற பின்  சைவம்,  வைணவம் ஆகிய இரண்டும் என்றும்  காஞ்சியில் சிறப்புடன் விளங்குகின்றன.  காஞ்சிபுரம் ஒரு 'கோவில் நகரமாகும்'.  காஞ்சிபுரத்தில் நமது பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள் பற்றி  காணலாம். 

  காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய  சிவ வழிபாட்டு தலங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள பிரத்விலிங்கம் தென்னிந்தியாவின் பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையை உடையது.  இக்கோயிலின் ராஜா கோபுரம் தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளது.

 பெரிய காஞ்சிபுரம் அல்லது 'சிவகாஞ்சி'  எனப்படும் நகர்ப்பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்ற புகழ்மிக்க சிவன் கோயில் உள்ளது.  காஞ்சிபுரத்தில் உள்ள மிகப்பெரிய கோவில்  என இதனைக் கருதலாம். பல்லவ மன்னர்கள்,  சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள்  ஆகியோரின்  திருப்பணிகளை  கொண்டு   இக்கோயில் பிரமாண்டமாக  உருவாகி உள்ளது.   சோழ மன்னர்களில் மூன்றாம்  குலோத்துங்க  சோழனும் விஜய நகர  மன்னர்களில்   கிருஷ்ணதேவராயரும்  இக்கோயிலின் வளர்ச்சிக்கு முக்கிய திருப்பணிகள் புரிந்துள்ளனர்.  இக்கோயிலின் ராஜகோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாகும் (1509).  தமிழ்நாட்டில் உள்ள,  அழகிய பெரிய கோபுரங்களில் இதுவும் ஒன்றாகும்.  இக்கோயிலின் வெளிப்பகுதியில் உள்ள கற்சுவர்களும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.   கோவிலின் 'கல்யாண மண்டபமும்'  விஜயநகர மன்னர்கள் காலப் பணியாகும்.  வள்ளல் பச்சையப்ப முதலியாரின் (1754 - 1794)   திருப்பணியும் இக்கோவிலில் உள்ளது.

 கருவறையில் 'ஏகாம்பரர்'  லிங்க வடிவில் காட்சி தருகிறார்.  இக்கோயிலின் இறைவி 'ஏலவார்குழலி அம்மை'   எனப்படுகின்றார்.  இக்கோயிலில் உள்ள 'மாமரம்'  புனிதமாக கருதப்படுகிறது.  திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்,   சுந்தரர்,  மாணிக்கவாசகர் ஆகிய  சைவ     சமயசாரியார்கள் நால்வரும் இக்கோவிலை பற்றி பாடியுள்ளனர்.  பட்டினத்தார் இக்கோவிலை பற்றி '  திரு ஏகம்பரமாலை' யில்  பாடியுள்ளார். 

 கோவிலின் ஒரு பகுதியில்  விஷ்ணுவின் சன்னதி உள்ளது.  சைவ வைணவ சமய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சின்னமாக உள்ளது.  கோவிலின் மற்றொரு பகுதியில் நடராசர் சன்னதி உள்ளது.

 ஆயிரம் கால்  மண்டபமும்,  உட்பிரகாரத்திலுள்ள கற்றுண் களும் கட்டிடக்கலை சிறப்பு மிக்கவையாக உள்ளன.  1008 சிறிய லிங்கங்களின் உருவங்களை கொண்டுள்ள பெரிய லிங்கம் ஒன்று இக்கோவிலில் உள்ளது.

 இரண்டாம் மைசூர் போர் நடைபெற்ற பொழுது  ஆங்கிலேயர்களால் இக்கோயில் ஒரு  படைத்தலமாகப்  பயன்படுத்தப்பட்டது.

 ஸ்ரீ கைலாசநாதர் கோயில்

 ஸ்ரீ கைலாசநாதர் கோயில்  மூலவரான கைலாசநாதரை சுற்றி 58 லிங்கங்கள் உள்ளன. இக்கோயில் பல்லவப் பேரரசனான  ராஜசிம்ம  பல்லவன் ஆனால்  கட்டப்பட்டது.  இதனுடைய சுவர் ஓவியங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால்,  கலைத்துறையில் முக்கியத்துவம் பெற்றது. இதில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்  சித்தன்னவாசல் ஓவியத்திற்கு  காலத்தால் முற்பட்டவைகள்.  இக்கோயிலை ராஜசிம்ம பல்லவனுக்கு பின் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன் இக்கோயிலை மறுசீரமைப்பு செய்துள்ளார்.  இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

 காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமை மிக்க கோவில் கைலாசநாதர் கோவில் ஆகும்.  இக்கோவில் காஞ்சிபுரம் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இக்கோயில் பல்லவ மன்னன்  ராஜசிம்மனால் (கிபி 700 - 720)  கட்ட ஆரம்பிக்கப்பட்டு அவரது மகன் மூன்றாம்  மகேந்திரவர்மனால் கட்டிமுடிக்கப்பட்டது.

 இது புகழ்மிக்க சிவாலயமாகும்.  இதை கல்வெட்டுக்கள்  ' இராஜசிம்மேஸ்வரம்'  எனக் கூறுகின்றன.  இக்கோயில் சுமார் 1300  ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும் " பல்லவர்களுடைய  கட்டிடக்கலை களிலேயே உன்னத சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம்"  ஆகும்.

 இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.  இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதி வரை கல்லால் ஆனது.  அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது.  பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இது விளங்குகின்றது.  மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ர ரதத்தை போன்ற உச்சிப் பகுதியை விமானம் கொண்டுள்ளது.  பிரதான ஆலயத்தை சுற்றி பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன.  இவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தை கொண்டுள்ளன.   திரு ஆலயங்கள் இராஜசிம்மன் உடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும்.

 ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன.  தட்சிணாமூர்த்தி,  லிங்கோத்பவர்,  ஊர்த்துவ தாண்டவர்,  ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும்.  உமையன்னை,  முருகப் பிரான்,   திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன.  துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத் திருவுருவங்கள் உள்ளன.

 இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன்  மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட   சிறு கோவில் உள்ளது.  இங்கு காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பு கலைச் சிறப்புமிக்கவையாகும்.
 கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாக பல்லவ சிற்பிகள் வடித்துள்ளதைக்  காணலாம்.

 பிரதான ஆலயத்திலும்  சுற்றிலுமுள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300  வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன.  இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில்  கந்தர் உள்ள காட்சியாகும்.  கிபி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணன் காலத்தில்,  பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவை ` இரு அடுக்கு ஓவியங்கள்`  எனப்படுகின்றன.  பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய்  என்பவர் கிபி 1931  இல்  கண்டுபிடித்தார்.

 இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன்  அவர்களை வென்று காஞ்சியை பிடித்த பொழுது (கிபி 740)  காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களை  பட்டகடலுக்குக் (கர்நாடகா)  கொண்டு சென்றார்.   அங்கு அரசி லோக மாதேவியின் கட்டளைப்படி  விருப்பாசா என்ற கோவில் நிறுவப்பட்டது.  இக்கோவில் காஞ்சி கைலாசநாதர்  கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

 கைலாசநாதர் கோவில்,  பல்லவ மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள ஒரு சிறப்புமிக்க கோயிற்கலை செல்வமாகும்.  முற்றிலும் மணற்பாங்கான  கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலை நல்ல முறையில் நாம் காக்க வேண்டும். 

 காஞ்சிபுரம் நகரில் மேலும் பல சிவன் கோவில்கள் உள்ளன.  இவற்றுள் குறிப்பிடத்தக்கது முக்தீஸ்வரர் கோவில் ஆகும்.  இது இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.

 காமாட்சியம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி அம்மன் அருள் வழங்கும் திருத்தலம்.  இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே,  அம்பிகையாக  நினைத்து வழிபடும் மரபு இங்கு உள்ளது. ஆதிசங்கரர் இங்குதான் புத்த தத்துவம் ஞானிகளை தன் திறமை மிக்க வாதத்தால் தோற்கடித்தார்.  இந்தியாவின் மூன்று முக்கியமான சக்தி தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் சோழ அரசர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  இக்கோயிலின் மத்தியப் பகுதியில் தங்க கோபுரம் ஒன்று உள்ளது.  பங்குனி மாதம் 9 ஆவது சந்திர நாளில் இக்கோயிலின் பிரசித்தி பெற்ற ரத உற்சவம் நடைபெறும்.

 காஞ்சி நகரின் மத்தியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.  இக்கோவில். ' பெரியபுராணம்'  காலம் முதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.  விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

 காயத்ரி மண்டபத்தில் காமாட்சியம்மன் காட்சி தருகிறார்.  காமகோடி காமாட்சி,  ஸ்ரீ சக்கரம் அருள் பாலக்ஷிமி,  அன்னபூரணி,  மகிஷாசுரமர்த்தினி,  காசி விசுவநாதர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன.

 காஞ்சிபுரத்தில் எந்த சிவன் கோவிலிலும் அம்பிகைக்கு எனத்  தனியாக கருவறை இல்லை. காஞ்சி காமாட்சியம்மன்,   காஞ்சி காமாட்சி அம்மன்,  காஞ்சி நகர் முழுமைக்கும் ஒப்பற்ற பின்புலமாக காட்சியளிக்கிறார்.

 காமாட்சி அம்மன் கோவில் அருகில்  'குமரக் கோட்டம்'  என்ற முருகன் கோவில் உள்ளது.

'கோவில் நகரம்' எனப்படும் காஞ்சியில் மேற்கூறப்பட்டுள்ள ஆலயங்களை தவிர மேலும் பல சிவாலயங்கள் உள்ளன.  பல சிவாலயங்களில் கட்டிய பல்லவ மன்னர்கள் புகழ்மிக்க வைணவ ஆலயங்களையும் எங்கு அமைத்துள்ளனர்.  இதனால் சைவம்,  வைணவம் ஆகிய இந்து சமயத்தின் இரு பிரிவுகளுக்கும் சிறந்த மையமாக காஞ்சிபுரம் உள்ளது.  சிவாலயங்கள் மிகுதியாக இந்த நகர் பகுதி சிவகாஞ்சி எனவும்,  வைணவ ஆலயங்கள் மிகுதியாக இருந்த பகுதி  விஷ்ணு காஞ்சி எனவும்  அழைக்கப்படலாயிற்று.

 வரதராஜ பெருமாள் கோவில்

 வரதராஜ பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரும் கோவில்களில் ஒன்று. இக்கோயில் ஹஸ்தகிரி  குன்றில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் கலை நுட்பங்கள் நூறு தூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்று விஜயநகர பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது.  ஒரே கல்லால் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்க வளையங்கள்,  சங்கிலித் தொடராக நான்கு மூலையிலும் தொடர்ந்து காணப்படுவது  இதன் தனித்தன்மையாகும்.  கலைநுட்பத்துடன் செதுக்கப்பட்ட ரதி மன்மதன் சிலைகள்,  குதிரை வீரர்கள் இன்னும் பல குறிப்பிடத்தக்க சிலைகளும் இக்கோயிலின் சிறப்பம்சமாக உள்ளது. இங்கு வைகாசி மாதத்தில் நடைபெறும் கருட உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

 காஞ்சிபுரம் நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில்  'சின்னக் காஞ்சிபுரத்தில்'  வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.  பல   ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோவிலாகும்.  பல்லவ,  சோழ,    விஜயநகர மன்னர்களின் திருப்பணிகளை இக்கோவில் கொண்டுள்ளது.

 பெருமாளின் சன்னதி அத்திகிரி  என்ற சிறு குன்றின் மீது உள்ளது.  பெருமாள் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.  தாயார் பெருந்தேவி எனப்படுகிறார்.  இக்கோவிலில் யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது.   அத்திகிரியின்கீழ்   உள்ள குகையில்  ஸ்ரீ அழகிய  சிங்கரும்,  ஸ்ரீ ஹரிதார்த்த  தேவியும் காட்சி தருகின்றனர்.
 இக்கோவிலில் ஆனந்த தீர்த்தம் என்ற புனித குளம் உள்ளது.  இக்குளத்திலுள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு அடியில் ஒரு வெள்ளிப் பெட்டியில்  ஸ்ரீ அத்தி வரதர் வைக்கப்பட்டிருக்கிறார்.  45 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தின் நீர் இறைக்கப்பட்டு ஸ்ரீ அத்திவரதர்  காட்சிக்கு வைக்கப்படுகிறார். 

 விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட அழகிய கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளன.  சக்கரத்தாழ்வார் சன்னதி தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.  கோவிலிலுள்ள தங்க,  வெள்ளி பல்லிகள் புராண வரலாற்றைக் கொண்டுள்ளன.

 ஆனந்த தீர்த்தத்தின் அருகில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் இக்கோவிலின்  கலைக் கருவூலம்  ஆகும்.  இம்மண்டபம்  கிபி 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.   இம் மண்டபம் விஜயநகர அரசு சிற்பிகளின் அற்புத வேலைப்பாட்டில் உருவான உன்னத படைப்பு ஆகும்.   விஜயநகரக்   கலைக்குரிய காட்சிக் கூடமாக இதை கருதலாம்.  இம்மண்டபத்தில் உள்ள   கற்றுண்களில் இராமாயணத்திலும்,  மகாபாரதத்திலும் வரும் பல காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.  தசாவதார காட்சிகள்,  குதிரை மீது அமர்ந்துள்ள வீரர்களின் சிற்பங்கள்,  இதர பல சிற்பங்கள் ஆகிய யாவும் சிற்ப  வேலைப்பாடு மிக்கவை.  இம்மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒருதலை கருவூலமாகும்.  மண்டபத்தின் வெளிப்பகுதியில் நான்கு மூலைகளில் காணப்படும் கல் சங்கிலிகள்,   விஜயநகர சிற்பியின் கைவண்ணத்தை காட்டுகின்றன.

 வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம்  விஜயநகர மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒரு உன்னத கலை செல்வமாகும்.

 கோவிலின் மேல் திருச்சுற்றில் விஜயநகர காலத்து ஓவியங்கள் உள்ளன.  இங்கு கண்ணனுடைய திருவிளையாட்டுக்கள் பல அழகிய ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.  கிளியின் மேல் ரதிதேவி அமர்ந்துள்ள காட்சி,  ரதியும் மன்மதனும் உள்ள காட்சி ஆகியவை சிறப்பு மிக்கவை.  இவ் ஓவியங்கள் அச்சுத தேவராயர் காலத்தைய தாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 மேற்கூறிய இரு வைணவ   ஆலயங்களை தவிர காஞ்சிபுரத்தில் மேலும் புகழ்மிக்க வைணவ ஆலயங்கள் உள்ளன.  அவைகளில் ஒன்று உலகளந்த பெருமாள் கோவில் ஆகும்.  'உலகளந்த பெருமாள்'  திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும்.  இங்கு பெருமாளின் தூக்கிய திருவடியை காணலாம்.  இக்கோவில் பல்லவர்கள்,  சோழர்கள் ஆகியோரின் திருப்பணிகளை கொண்டுள்ளது.

வைகுந்த பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் நகரில் உள்ள வைகுண்ட பெருமாள் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பழமைமிக்க வைணவ ஆலயங்களில் ஒன்றாகும்.  பரமேஸ்வரவர்மன் என்ற இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் (கிபி 730 - 795) இக்கோயில் கட்டப்பட்டது.  இது திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும்.  பரமேஸ்வர விண்ணகரம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட விமானத்தை கொண்டுள்ளது.  இங்கு இறைவன் அமர்ந்த நிலையில், நின்ற நிலை,  சயன நிலை ஆகிய மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார். (இதுபோன்று உத்திரமேரூர்,  திருக்கோஷ்டியூர்,  மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் உள்ளன).  திருமாலின் பல அவதாரங்களை காட்டும் அழகிய சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன உள்ளன. தாயார்  ஸ்ரீவைகுந்தவல்லி எனப்படுகிறார். வைகுண்ட ஏகாதசியன்று இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலின் திருச்சுற்றில் காணப்படும்  சுவா்ச் சிற்பத் தொகுப்புகள் மணற்பாங்கான கற்களால் ஆக்கப்பட்டுள்ளனச  ஓரளவிற்கு சேதமடைந்த நிலையில் உள்ளன.  இச்சிற்பத் தொகுதிகள்  பல்லவ அரசர்களின் வரலாற்றில் சிற்ப வடிவேல் சித்திரிவிக்கின்றன.   பல்லவ மன்னர்களின் ஆட்சி முறை,  போர்,  அக்கால சமயம்,  சமூக வாழ்க்கை ஆகியவும்.  இச்சிற்பங்களில் இருந்த அறியப்படுகின்றன.  இச்சிற்பங்கள் அரிய கலை படைப்புகள் ஆகும்.

பல்லவ மன்னர்களின் கட்டட மற்றும் சிற்பக் கலைத் திறனுக்கு இந்த பெருமாள் ஆலயம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

 மாங்காடு

மாங்காடு அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாகும்.  இங்கு காமாட்சி அம்மன் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்மனை தரிசிக்க ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.நேரம்:  காலை 6  மணி முதல் 1  மணி வரை.  மாலை 3  மணி முதல் இரவு 8  மணி வரை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்

கடவுள் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் ஆலயமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் திகழ்கிறது.  இங்கு வரும் பக்தர்கள் அனைவரும்  கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மனுக்கு நேரடியாக அர்ச்சனையின் பிரார்த்தனையும் செய்யலாம்.  அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்கு வந்து வழிபடவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதி உண்டு. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் ஆதிபராசக்தி அம்மன் கோவிலும் அதைச் சுற்றியுள்ள ஊரும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் உள்ள ஆஞ்சநேயர் சிலை மிகப் பெரியதாகும் இதன் உயரம் 32 அடி. இதன் பீடம் தாமரைப்பூ வடிவ கருங்கல்  மேடையில் இச் சிலை நிறுவப்பட்டுள்ளது.  நேரம் காலை 6  மணி முதல் 12  மணி வரை.  மாலை  4  மணி முதல்  இரவு 9  மணி வரை.

சிங்கப்பெருமாள் கோவில்

இங்கு பாதி சிங்க உருவமாகவும் பாதி மனித உருவமாகவும் உள்ள சிங்கப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.  இதன் உயரம்  6 அடி.  தமிழ்நாட்டில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில்களில் இது முக்கியமானதாகும்.  மலை மீது செவ்வண்ணத்தில் காட்சியளிக்கும் இக்கோயில் பாடலாற்றி எனவும் வழங்கப்படுகிறது.  இது தாம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில் கிபி ஏழாம் நூற்றாண்டில் ஆண்ட நந்திவர்ம பல்லவன் இக்கோயிலைக் கட்டினான்.  இதில் மிகச்சிறந்த சிற்பிகளைக் கொண்டு மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோயிலை கட்டியுள்ளார்கள். உள் பிரகாரத்தில் அலங்கரிக்கும் விதமா சிங்க  வடிவிலான தூண்கள் இங்கு உள்ளன. ஏகாதசியின்போது மிக அதிகமான பக்தர்கள் இக் கோவிலுக்கு வருவார்கள்.  இது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

சீரடி சாய்பாபா கோயில்

சீரடி சாய்பாபா கோயிலில் உள்ள பத்து கைகள் கொண்ட வல்லப கணபதி இக்கோயிலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.  இக்கோயிலில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன மற்றும் அதன் அருகிலேயே,  தத்தாரியா, லிங்கம்,  பார்வதி,  துர்க்கை, சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள சாய்பாபா கோவில் குருஜி சி.பி. சத்பதி  ஐ.பி.ஸ் அதிகாரி கட்ட  முயற்சி எடுத்துக்கொண்ட 108  கோவில்களில் இது  முதல் கோயிலாகும். இங்கு பக்தர்களுக்கு ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில்  அன்னதானம் வழங்கப்படுகின்றது.  காலை 6  மணி முதல்  இரவு 9  மணி வரை ஆராத்தி எடுக்கப்படும்.

திருப்பருத்திக்குன்றம்

திருப்பருத்திக்குன்றம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள சிறப்புப் பெற்ற கோயிலாகும்.  இது 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும்.  பகவான் மகாவீரரின் உருவச்சிலைகளும் மற்றும் பல ஓவியங்களும் சுவர் ஓவியங்கள் இங்கு தீட்டப்பட்டுள்ளன. வருத்தமான  மகாவீரருக்கு மிகவும் முன்னால் தோன்றிய சந்திர பிரபா என்னும் தீர்த்தங்கரர் இங்கு வீற்றிருக்கிறார்.

 காஞ்சிபுரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் 'ஜென  காஞ்சி'  பகுதியில்  திருப்பருத்திக்குன்றம் உள்ளது.   திகம்பரர், சுவேதாம்பரர்  என்ற சமணர்களின் வழிபாட்டுத்  தலமாகத்  திருப்பரங்குன்றம் உள்ளது.  பல்லவர் காலத்தில் எழுந்த சமணர் கோவில் இங்கு உள்ளது. 

 முதலில்  சமணராருந்து  பின் திருஞானசம்பந்தர் முயற்சியால் சைவசமயத்தில் சேர்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கிபி 600 - 630)  திருப்பரங்குன்ற ரமன ஆலயத்திற்குத்  திருப்பணி ஆற்றியுள்ளார்.  முதலாம் குலோத்துங்க சோழனின் திருப்பணியையும்  இவ்வாலயம் கொண்டுள்ளது.

 மலையனார்  கோவில் எனப்படும் சந்திரப் பிரபர்  ஆலயம் பல்லவர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவ்வாலயத்தில் சமண சமயத்தின் பதினேழாவது தீர்த்தங்கரரான குந்துநாதரின்  சலவைக் கல் சிலை உள்ளது.

 சந்திரபிரபர்  ஆலயத்திற்கு அருகில் வர்த்தமானர் ஆலயம் உள்ளது.  இவ்வாலயத்தில் 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரின் திரு உருவ சிலை உள்ளது.  இங்கு வேறு பல தீர்த்தங்கரர்களின் சன்னிதிகளும் உள்ளன.
 சங்கீத மண்டபத்தில் சமண தீர்த்தங்கரரான ரிஷப தேவர்,  நேமிநாதர்,  வர்த்தமானர் ஆகியோரின் திருவுருவங்களை கொண்டுள்ள அழகிய ஓவியங்கள் உள்ளன.  சங்கீத மண்டபம்  விஜயநகர மன்னர் புக்கராயர்  காலத்தில் அவரது அமைச்சர் இருகப்பன்  என்பவரால்  எடுக்கப்பட்டதாகும்.

 திருப்போரூர்

திருப்போரூர் சென்னையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்திலுள்ள முக்கியமான முருகன் கோயிலில் ஒன்று.  இக்கோயில்  பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.  இது செங்கல்பட்டிலிருந்து 25  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திருநீர்மலை

திருநீர்மலை  குன்றில் பள்ளி கொண்டிருக்கும்  அரங்கநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று.  இது சென்னையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இக்கோவிலில் பிற்காலச் சோழர்களின் கட்டிட பாணியில் அமைந்த ஒன்றாகும்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  மூலவருக்கு படைக்கப்படும் திரு அமுது,  கருடனுக்கு வழங்குவதாக பாவித்து  கழுகுகளுக்கு இங்கு படைக்கப்படுகின்றது. கழுகுகளும் வந்தது உண்கின்றன.  எனவே இவ்வூர் திருக்கழுக்குன்றம் என்று வழங்கப்பட்டது. உத்திர கோடி,  நந்திபுரி,  இந்திரபுரி,  நாராயணபுரி, தினகரபுரி, முனிகணபுரி, முதலியன இக்கோயிலுக்கு உள்ள மற்ற பெயர்களாகும்.  இது செங்கல்பட்டு மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர் என்று  பெருமை பெற்றது. இது சென்னை காஞ்சிபுரம் சாலையில் 29ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. அந்தணர் குலத்தில் தோன்றிய ஸ்ரீ ராமானுஜர் சாதி அமைப்பிற்கு எதிராக போராடினார்.  இதற்காக அவருக்கு தெரிந்த,  பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

வல்லக்கோட்டை

 வல்லக்கோட்டை முருகன் கோவிலில் உள்ள முருக பெருமானின் சிலை 7அடி உயரமுள்ள திருஉருவ சிலை ஆகும்.  இக்கோயிலில் உள்ள சிலை தமிழகத்திலுள்ள முருகப்பெருமானின் சிலைகளில் மிகப்பெரியதாக கருதப்படுகின்றது.  இது கோட்டை ஆண்டவர் கோயில் என்றும் வழங்கப்படுகின்றது.  இக்கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்.  திருப்புகழில் உள்ள ஏழு பாடல்கள் இங்குள்ள முருகன் மீது பாடப்பட்டதாகும். இக்கோயில்  ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

இது சென்னையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த பூங்கா வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பார்வையாளர்கள் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்குமாறு விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே அகழி  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன என தனித்தனி பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு சிங்கங்களை காண அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியோக வாகனங்களில் சென்று சுதந்திரமாக இருக்கும் சிங்கங்களை காணலாம். இந்த பூங்கா முழுவதையும் சுற்றிப் பார்க்க மின்சாரத்தால் இயங்கும்  வாகனங்களில்  சென்று சுற்றிப் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா இல்லம்

தமிழகத்தின்  முன்னாள் முதல்வராக இருந்த C.N. அண்ணாதுரை அவர்களின் இல்லம் 16-09-1980 முதல் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அவரின் உருவச்சிலை,  வாழ்க்கை வரலாறு மற்றும் பல அரிய புகைப்படங்கள் ஆகியன இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஒரு பழமையான நகரமாகும் இந்நகரத்தில் விஜயநகர கோட்டை ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. கொலவை ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு சவாரிக்கான வசதிகளை செய்துள்ளது. ஒரு காலத்தில் செங்கல்பட்டு நகரம் தனி மாவட்டமாக இருந்தது பிறகு நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்துடன் நீக்கப்பட்டது.

 அஸதபுஜ பெருமாள் கோயில்

அஸதபுஜ பெருமாள் கோயில் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்றான இது கல்லில்  வடிக்கப்பட்ட கோவிலாகும். இந்த கோயிலில் உள்ள பெருமாள் எட்டு கைகளுடன் காட்சியளிக்கின்றார்.

காஞ்சி காமகோடி பீடம்

காமகோடி பீடத்தில்  அன்னை காமாட்சியின் திருவுருவத்தின் முன்பாக சங்கரரால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும்.  ஸ்ரீ சக்கரம் உள்ளது பூசைகள் மற்றும் படையல்கள் அனைத்தும்  இங்கு ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. 

ஜீவானந்தம் உருவச்சிலை

 ஜீவானந்தம் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 1957இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மார்க்சிய  இயக்கத்துக்கு முன்னெடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைவர். இவர் இலக்கியம் மற்றும் சிறந்த பேச்சாளர். தாம்பரத்தில் இவரது உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது.

கந்தகோட்டம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில்

ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலுக்கும்  காமாட்சியம்மன் கோவிலுக்கும் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. புராணங்களில் காஞ்சி நகரம் இடம்பெற இக்கோயிலும் ஒரு முக்கிய காரணமாகும்.  இப்பொழுது உள்ள கோயிலின் கட்டிடக் 1915இல் கட்டப்பட்டது.

கிஷ்கிந்தா

கிஷ்கிந்தா சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இது சென்னை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு பலவிதமான நீர்  விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

மதுராந்தகம்

மதுராந்தகம் சென்னையிலிருந்து 90  கிலோமீட்டர் தொலைவில், செங்கல்பட்டு விழுப்புரம் இடையே அமைந்துள்ளது. இங்குள்ள மதுராந்தகம் ஏரிக்கரையில் உள்ள கோயிலில் ஸ்ரீ ராமர்,  சீதாலட்சுமி, இலக்குவன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தக் கோயிலில் அனுமான் இல்லாதது மிகவும் அரிதான ஒன்றாகும். இராமானுஜர் தனது குருக்களில் ஒருவரான ஸ்ரீ மஹாபூர்ணா என்ற பெரிய நம்பியை கண்டடைந்து, கோயிலில் உள்ள பகுள மரத்தடியில் ஆசி பெற்றார்.

மசூதி

இங்கு பழமையான மசூதி ஒன்று உள்ளது.  இது 450 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாப் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மசூதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

வைகுந்த பெருமாள் கோவிலுக்கு அருகில் ஒரு மசூதி உள்ளது.  இந்த மசூதிக்கும் கோவிலுக்கும் நடுவே உள்ள குளத்தை இஸ்லாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து பயன்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்கள்.  இஸ்லாமிய மக்கள் தங்களுக்குள் உள்ள மதநல்லிணக்கத்தை காட்ட கோயிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் பங்கேற்கிறார்கள்.

காஞ்சிபுரம் பட்டு தொழில்

காஞ்சிபுரம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது காஞ்சிபுரம் பட்டு. காஞ்சிபுரத்தில் உள்ள மக்களின் 75 சதவிகிதத்தினர்  நேரடியாகவோ மறைமுகமாகவோ பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால்  காஞ்சிபுரம் பட்டுத் தொழிலின் தலைநகரமாக விளங்குகிறது.

ராஜீவ் காந்தி நினைவிடம்

 ராஜீவ் காந்தி  இந்திய பிரதமராக 1984-1989  திகழ்ந்தார்.  உலக அமைதிக்கு பாடுபட்ட  அவர் 21-5-1991  அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக படுகொலை செய்யப்பட்டார்.  இவ்விடத்தில் அவர் நினைவாக நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீ பெரும்புதூரில்  காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

சகுந்தலாஜெகநாத் பாரம்பரிய அருங்காட்சியகம்

 இந்த வீடு 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சி.பி.  ராமசாமி ஐயருக்கு சொந்தமானது.  இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.  இங்கு பழங்கால ஓவியங்கள் சிற்பங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நேரம்:  காலை 9.30  முதல் மகளை 5  மணி வரை. 

உத்திரமேரூர்

உத்திரமேரூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 'குடவோலை முறை' ஆகும். இங்குதான் தமிழகத்தில் முதன்முறையாக மக்களாட்சி முறை நடைபெற்றதற்கான அதிகாரப்பூர்வமான ஆவணம் பொறிக்கப்பட்ட சோழர் ஆட்சி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. உத்திரமேரூர் கல்வெட்டு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் விண்ணப்பதாரர்களுக்கான தகுதி, தேர்தல் நடக்கும் முறை,  தேர்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்,  குடிமக்களின் கடமைகள்,  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவி இழப்பதற்கான சூழ்நிலைகள்,  உறுப்பினர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றாத நிலையில் அவர்களை திரும்பி அழைக்கும் உரிமை  என்று ஜனநாயக அம்சங்கள் கடைபிடிக்க பட்டதற்கான வரலாற்று ஆவணம். இங்கு சிவன் கோயில் ஒன்றும்  மற்றும் விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளன.

 கல்பாக்கம் அணு மின் ஆய்வு நிலையம்

கல்பாக்கம் அணுமின் நிலையம் 1971 இல் தொடங்கப்பட்டது.  இது 1985  இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  இங்கு அணுக்கதிர் வீச்சு  தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் படிநிலைகளை ஆராயவும் இம்மையம்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  யு233 எரிபொருளை வெற்றிகரமாகப் பயன்படுத்தும் செயல் நிலையில் உள்ள உலகின் ஒரேரியாக்டர் என்ற பெருமையை பெறுகிறது.  இது இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

வேடந்தாங்கல்

 வேடந்தாங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது பறவைகள் சரணாலயம் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் கொக்கு,  மீன்கொத்தி மற்றும் செந்நாரை இனங்கள் மற்றும் பலவிதமான பறவைகள் இங்கு வரும்.  இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை  பறவைகள் தங்கிச் செல்லும் காலமாகும்.  இங்கு ஏரிக்கரையில் 24 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தொலை நோக்கி மூலம்  இச்சரணாலயத்தின் அழகை கண்டு மகிழலாம். வேடந்தாங்கல் காஞ்சிபுரத்திலிருந்து 48  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

போர் நினைவு கல்லறை

  போர் நினைவு கல்லறையில் அணிசேரா நாடுகளை சேர்ந்த 855 ஆண் மற்றும் பெண் போர் வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது இக்கல்லறை. இது இந்திய அரசு மற்றும் காமன்வெல்த் குழு இணைந்து பராமரிக்கும் ஒரு முக்கிய இடமாகும்.