செஞ்சிக் கோட்டை : Senji Kottai History in Tamil

செஞ்சி என்ற ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.  திண்டிவனத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது.  செஞ்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செஞ்சிக்கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி,  ராஜகிரி, சந்திரகிரி  என்ற மூன்று குன்றுகளை வளைத்து,  சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் முக்கோண வடிவில் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது.  முக்கோண வடிவில் உள்ள இக்கோட்டை கீழ் கோட்டை (Lower Fort)  எனப்படும்.  ஒவ்வொரு குன்றின் மீதும் பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன.   கீழ்க் கோட்டையினுள்  நுழைய ஆற்காடு அல்லது வேலூர் வாயில்,  பாண்டிச்சேரி வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன.

  திசைகளை வைத்து பார்ப்பின்  கிருஷ்ணகிரி கோட்டை வடக்கிலும்,  ராஜகிரி கோட்டை மேற்கிலும்,  சந்த்ரயன் துர்க்கம் தெற்கிலும் உள்ளது.  இம்மூன்று மலைக்கோட்டைகளின்  உச்சிகளுக்கும் செல்லப்  படிக்கட்டு வசதி உள்ளது.  இம்மூன்றில் இராஜகிரி கோட்டையே மிகவும் உயர்ந்தது இதன் உயரம் 235 மீட்டராகும்.

 கிருஷ்ணகிரி மலைக்கோட்டை

 செஞ்சி- திருவண்ணாமலை  சாலைக்கு வெகு அருகில் சாலையின் வலது புறம்  கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது.  மலைமீது ஏறி  உச்சிக்கு செல்லும் வழியில் இரு பெரிய தானிய களஞ்சியங்களை காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவில் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும்  இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.

கிருஷ்ணகிரி கோட்டை  ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.  மலைக்கோட்டைக்கு செல்ல கற்படிகள் உள்ளன.  தூண்களில் அமைக்கப்பட்ட மண்டபம்,   இரண்டு கோயில்கள்,  செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு மாளிகை,  பார்வையாளரும் இடம்பெறக்கூடிய வட்டமான தர்பார் ஒன்றும் சிறு பீரங்கியும் இங்கு காணப்படுகின்றன.

இராஜகிரி மலைக்கோட்டை

 செஞ்சி- திருவண்ணாமலை  சாலையின் இடது புறம் சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை  உள்ளது.  இராஜகிரிக்குச் செல்லும் வழியில்  பட்டாபி ராமர் கோயில் உள்ளது.  இராஜகிரி கோட்டைக்குள்  மராத்திய கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண மண்டபம் உள்ளது.  ஏழு அடுக்குகளைக் கொண்ட இக்கட்டடம் மரத்தை பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளது.  கல்யாண மண்டபத்தை அடுத்து வெடி மருந்து சாலை, பெரிய தானிய களஞ்சியம்,  வீரர்கள் தங்கி இருந்த கட்டடங்கள்,  இராஜா தேசிங்கின் உடல் தகனம்  செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை,  வெங்கடரமணா  கோயில் ஆகியவை உள்ளன.  வெங்கடரமணா கோவிலின்  வேலைப்பாடு மிகுந்த ஒற்றைக்   கல்தூண்கள் சிலவற்றைப்  பெயர்த்து,  பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ராஜகிரி மலைக்கோட்டையில் பார்வையாளர்கள் இடம்பெறக்கூடிய அரச தர்பார்  ஒன்று  இம்மலை உச்சியில் உள்ளது.  இது இந்தோ இஸ்லாமிய பாணியில் இந்த தர்பார் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  மேல் வளைவுகள் வரிசையாக அமைய,  குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு நம்மை அசத்திவிடும். மண்டபத்தின் மூடிய கூரை ரசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மலைமீதுள்ள  குறிப்பிடத்தக்க  மற்றுமொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு.  மலைமீது அரங்கநாதர் கோவில் ஒன்றும் உள்ளது.  இது நாயக்கர் கால கட்டிடக்கலையை கொண்டுள்ளது. இங்கு நாலு மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்று உள்ளது.

 இராஜகிரி மலைக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன.  எட்டாவது வாயிலுக்குள் நுழையும் இடத்தில் மரப்பாலம் ஒன்று உள்ளது.  உச்சியில் நாணயச் சாலை,  தெய்வம் இல்லாத ரங்கநாதர் கோவில்,  ராஜாதேசிங்கு தர்பார் மண்டபம்,  மணிக்கூண்டு ஆகியவற்றை காணலாம்.

 இராஜகிரி  மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை (Inner Fort)  உள்ளது.  இக் கோட்டை பகுதியில் புதுச்சேரி வாயில்,  வேலூர் வாயில் ஆகியவை உள்ளன.  புதுச்சேரி வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டிடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன.  வாயில் அருகில் உள்ள கோட்டைச் சுவரில்,  ஆற்காடு நவாப்  சதாத்  உள்ளான் உல்லாகான் கிபி 1713இல்   தேசிங்குராஜானை வீழ்த்தி இக்கோட்டையை பிடித்த வெற்றி செய்தியை குறிக்கும் 'பாரசீக மொழி கல்வெட்டு'  உள்ளது. 

 ராஜகிரி மலைகோட்டைக்குத்  தெற்கில் சந்த்ரயன்  துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.
 தமிழ்நாட்டில் செஞ்சிக்கோட்டையை போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம்.  இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் திறந்த தொல்பொருள் சின்னமாகும்.

 செஞ்சியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் தளவானூர் என்ற இடம் உள்ளது.  இங்குள்ள பஞ்சபாண்டவர் மலையின் தென்பகுதியில் பல்லவர் கால குடைவரை கோயில்  ஒன்று உள்ளது.  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கிபி 600 -630)  இக்கோவில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.  கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரை கோவில்  சத்ரு  மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.

 தளவானூரிலிருந்து  பத்து கிலோமீட்டர் தொலைவில் மண்டகப்பட்டு குகைக்கோயில் உள்ளது. இக்கோவிலை  அமைத்தவர் விசித்திர சித்தனான  மகேந்திரவர்ம பல்லவர் ஆவார்.

செஞ்சி கோட்டை மதில்கள்

 செஞ்சியிலுள்ள, கிருஷ்ணகிரி,  சந்திரகிரி  மற்றும்  ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை இந்த மாபெரும் கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன.  இவற்றில் 800 அடி உயரமுள்ள  ராஜகிரி மலைதான் தனியாக இவற்றோடு பொருந்தாமல் நிற்கும் ஒன்றாகும் தற்போது ஒரு பாலத்தால் 20 மீட்டர் வரை ஆழமுள்ள சுனை இணைக்கப்பட்டுள்ளது.

 போர்வீரர் தங்குமிடங்களும் குதிரை லாயங்களும்

போர்வீரர் தங்குமிடங்கள் கல்யாண மகாலுக்கு மேற்கு திசையில் இது உள்ளது.  உயரம் குறைந்த கவிகை மாடங்களுடன்  வளைவு வளைவான நுழைவாயில்கள் கொண்ட தனி அறைகளும் போர் வீரர்கள் தங்கவும் குதிரைகள் இளைப்பாறவும் கட்டப்பட்டுள்ளன.  இது தற்பொழுது தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் இங்கு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

ஆனைகுளம்

போர்வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள இந்த யானைக்குளம் மாடங்கள் அழகாக அமைந்துள்ளன.

சதத் உல்லாக்கான் மசூதி

தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி.  இது கிபி 1717-1718-ல் கட்டப்பட்டதாக இங்குள்ள பார்சிய கல்வெட்டு  தெரிவிக்கிறது.

வெங்கட்ரமணா கோயில்

வெங்கட்ரமணா கோயில் பரந்து விரிந்துள்ளது இதில் நிறுவப்பட்டுள்ள முனைப்பான தூண்களும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நாயக்கர்களின் சிற்ப திறமைகளை எடுத்துரைக்கின்றன.

வேணுகோபால் சாமி கோவில்

வேணு கோபாலஸ்வாமி கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன.  கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட  மென்மையான தளம் ஒன்று இதன் இன்னொரு சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.

 செஞ்சி கோட்டை வரலாறு Or Senji Kottai History in Tamil

 கிபி 13 ஆம் நூற்றாண்டில் இருந்து  செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம்  பெறத் தொடங்கிற்று.  சுமார் கிபி 1200 இல்  அனந்த கோனார் வழியில் வந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றும் ஒரு கோட்டையைக் கட்டினார் என்றும்,  இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

 கிபி 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர அரசின் ஆட்சியின் கீழ் வந்தது.  விஜயநகர அரசு காலத்தில் செஞ்சிக்கோட்டை  மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது.  விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கிபி 1509 - 1529)  நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத்  தம் பிரதிநிதியாக செஞ்சியில் நியமித்தார்.   வையப்பர் செஞ்சியை தலைநகராகக்கொண்டு தொண்டைமண்டல பகுதியை ஆட்சி புரியலானார் (1526).  இவர் விஜயநகர மன்னர்களிடம் விசுவாசமாக நடந்து கொண்டார்.  வையப்பரை  அடுத்து துபாகி  கிருஷ்ணப்பர்  என்பவர் சிந்தி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி  கிருஷ்ணப்பர் காலத்தில் ஆனந்தகிரி கோட்டை  'இராஜகிரி கோட்டை'  என்ற பெயரைப் பெற்றது.  இவர் இராஜகிரி மழையில் கொத்தளங்கள்,  தானியக் களஞ்சியங்கள்,  மூன்று குன்றுகளை சுற்றியுள்ள  மதில்கள் ஆகியவற்றை கட்டினார்.   இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர்,  இரண்டாம் கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர்களாக இருந்தனர்.

 இரண்டாம் கிருஷ்ணப்ப (1570-1608)  வலிமைமிக்க மன்னனாகத் திகழ்ந்தார்.  சிறந்த ஆட்சியாளராக விளங்கினார்.  இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தினரும் ஏற்றனர்.  இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி தமிழ்நாட்டின் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர் டச்சு காரர்களுக்கு கடலூருக்கு அருகில்  வாணிபத்தலம் அமைக்க அனுமதி கொடுத்தார்.  இவர் விஜயநகர அரசருக்கு கப்பம் செலுத்த தவறியதால்,  விஜயநகர அரசர் முதலாம்  வேங்கடன்  செஞ்சி மீது படையெடுத்து வென்றார்,  இரண்டாம் கிருஷ்ணப்பர் சிறைபிடிக்கப்பட்டார்.  இவருக்கு பெண் செஞ்சி நாயக்க அரசு வலிமையற்றதாக்கிவிட்டது.   கிபி 1649இல் கடைசி  செஞ்சி நாயக்கரை தோற்கடித்து பிஜப்பூரின்  படைகள்  செஞ்சியை பிடித்தனர்.  பீஜப்பூரின் படைகள்  தெரிஞ்சியை  பாதுஷா பாத் என்று பெயரிட்டு ஆட்சிபுரிந்தன.  1677 இல்  மராட்டிய தலைவர்  சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது.  சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவான தாக்கப்பட்டது.  முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் அவர் தளபதி  சுல்பிகர்கானின்  நீண்ட முற்றுகைக்கு பின் செஞ்சி  மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.   சுல்பிகர்கான்   சொரூப்சிங் என்ற இராஜபுத்திரிடம்  செஞ்சியின் ஆட்சியை ஒப்படைத்தார்.  முகலாயருக்கு உட்பட்ட,  கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.

சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார்.  இவர் ஆற்காட்டு நவாபின் மேல் அதிகாரத்தை ஏற்க மறுத்து,  அவருக்கு கப்பம் கட்டவில்லை.  இதனால் ஆற்காட்டு நவாப் அதாவுல்லா  சதாத் -உல்லா-கான்   கிபி 1713இல்  ஒரு படையுடன் தேசிங்கு ராஜனை தாக்கினார்.  செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது.  தேசிங்கு ராஜா வீரமாக போரிட்டார்.  அவருக்கு மாபதிகான்  என்ற நண்பரும் உதவினார்.  இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார்.  ஆற்காடு நவாப்  செஞ்சியை கைப்பற்றினர்.  தேசிங்கின் மனைவி உடன்கட்டையேறினார்.  இவ்அரசியின் வீரத்தைப் பாராட்டி ஆற்காட்டு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை  ஆற்காடுக்கு அருகில் உண்டாக்கினார்.

 கிபி 1750 இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சு தளபதி செஞ்சியை கைப்பற்றினார்.  1750 முதல் 1761 வரை  செஞ்சிக்கோட்டை பிரெஞ்சுக்காரர்கள்  வசம் இருந்தது.  1761 இல் ஸ்டீபன் சுமித்  என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப்பட்டது.  1780 இல்  மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியை பிடித்தார்.  ஆனால்,  மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர் வசம் வந்தது.  இதன்பின் செஞ்சிக்கோட்டை  அதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது.  இன்று செஞ்சிக்கோட்டை ஒரு தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது.