கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோயில் Appakkudathaan Perumal Temple
பக்தர்களைக் காக்க பெருமாள் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறார். ஆனால் நமக்கு தெரிந்தது பத்து அவதாரம். தெரியாது எத்தனையோ இருக்கலாம். இந்த இடத்தில்தான் அவதாரம் எடுக்க வேண்டுமென்று பகவான் நினைத்ததில்லை. பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, நேரடியாக மறைமுகமாக அவதாரம் எடுத்துக் கொண்டுதான் வருகிறார். இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சை மார்க்கம் செல்லும் காலையில் குடிகொண்டிருக்கும், அப்பக்குடத்தான் பெருமாள் கோவிலைச் சொல்லலாம்.
கோவிலடி என்று இந்த திருக்கோவிலுக்கு மற்றும் ஒரு பெயர் உண்டு. இந்திரகிரி, பவா சவன சேத்திரம், பஞ்சரங்கம், அப்பாவா ரங்கநாத சுவாமி திருக்கோயில் என்று புராணங்களில் இத்திருத்தலத்தை பற்றி பெருமையாக கூறப்பட்டிருக்கிறது. காவிரி கொள்ளிடம் நதிகளுக்கு இடையில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கு நோக்கிய மூன்று பெரிய இராஜகோபுர தோடு கோயில் காட்சியளிக்கிறது. மூலவருக்கு அப்பக்குடத்தான் பெருமாள் என்று திருநாமம். புஜங்க சயனத்தில் மேற்கு திசை நோக்கி தரிசனம் காட்டுகிறார். தாயார் திருநாமம் கமலவல்லி. கோயிலின் தீர்த்தம் இந்திர தீர்த்தம். விமானம் இந்திர விமானம். மார்க்கண்டேய முனிவர் பெருமாளுக்குப் பக்கத்தில் இருக்கிறார்.
உபரிசரவஸீ என்னும் மன்னர், பெருமாள் பக்தர் ஒருவருக்கு அன்னதானம் செய்ய மறுத்ததினால் துர்வாச முனிவரின் சாபத்திற்கு பாத்திரமானான். அந்த சாபத்திலிருந்து நீங்க வேண்டுமானால் இந்த இந்திரகிரி கோவிலுக்கு வந்து ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று தன் சாபம் நீக்க தினமும் உபரிசரவஸீ மன்னன் இங்கு வந்து அன்னதானம் செய்து வந்தான்.
ஒரு நாள் பெருமாள், கிழவனாக வந்து உபரிசரவஸீ மன்னனிடம் அன்னதானம் கேட்க அன்றைக்குப் பார்த்து அன்னம் இல்லை. உடனடியாக அன்னம் தயாரித்து அளிக்க காலதாமதமாகும் என்பதினால் உண்மை நிலையைச் சொல்லி 'அன்னதானத்திற்கு பதிலாக வேறு எதுவாக இருந்தாலும் கேளுங்கள் தருகிறேன்' என்று மன்னன் பவ்யமாக கேட்க இறைவனும் ' சரி அப்பம் வேண்டும்' என்று கேட்டார். மன்னன் உடனடியாக ஆப்பம் தயார் செய்து கொடுத்தான். அதை உண்டு, பெருமாள் உபரிசரவஸீ மன்னனுக்கு கார்த்தி தனது துருவாச முனிவரின் சாபத்தை போக்கினார். பெருமாளே அப்பத்தை விரும்பி கேட்டதால் இங்குள்ள இறைவனுக்கு அப்பக்குடத்தான் என்று பெயர். என்றும் பெருமாள் வலது கையில் ஒரு அப்பக்குடம் இருப்பதை பார்க்கலாம். தினமும் இறைவனுக்கு நெய்வேதியம் அப்பம்தான்.
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இந்த பெருமாளை மங்களாசாசனம் அருளியிருக்கிறார்கள். நம்மாழ்வாரின் கடைசி காலம் இங்குதான் கழிந்தது. இங்கேதான் நம்மாழ்வார் மோட்சத்திற்கு சென்றதாக ஐதீகம். இந்த கோவிலுக்கு பின் வேறெங்கும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யவில்லை.
பரிகாரம்
இந்த தளத்திற்குச் சென்று பெருமாளுக்கு அப்பம் நெய்வேத்தியம் செய்து அதை நிறைய பேர்களுக்கு தானமாக வழங்கினால் உடலிலுள்ள அத்தனை நோய்களும் மறைந்துவிடும். தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிரம்மகத்தி தோசம் விலகும். யாரேனும் எப்பொழுதாவது இட்ட சாபத்தால் குடும்பத்தில் திருமணமாகாமல் பிள்ளைப் பேறு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பத்து நாட்களிலும் இங்கு வந்து கலந்து கொண்டவர்களுக்கு 'மோட்சம்' நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை.