திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில்) Uthamar Koil in Tamil
வைணவத் தலங்கள் எல்லாம் நம்மை வாழ்விக்க தோன்றியவை. எத்தனை தவறுகள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அதற்குரிய பலன்களை நாம் அனுபவிக்கும் பொழுது ' நாராயணா' என்று ஒருமுறை மனமுவந்து திருமாலை சரணாகதி அடைந்து விட்டால் அத்தனை பாவங்களும் விலகி கட்டங்கள் மறைந்து ஆனந்தமான இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் முன்னேற்றம் அடையலாம் என்பது அசைக்கமுடியாத சித்தாந்தம். இதற்கு உதாரணமாக விளங்குகிறது உத்தமர் கோயில் என்று அழைக்கப்படும் திருக்கரம்பனூரில் கோயில் கொண்டிருக்கும் கதம்ப க்ஷேத்திரம் என்று பெருமையாக சொல்லப்பட்டு வரும் புருஷோத்தமன் திருக்கோயில். இது திருச்சி விழுப்புரம் செல்லும் ரயில்வே பாதையில் இருக்கிறது. ஸ்ரீரங்கத்திலிருந்து திருவல்லரை போகும் பேருந்திலும் செல்லலாம்.
இதன் மூலவர் புருஷோத்தமன் பஜ்ங்க சயனமாக அருள்பாலிக்கிறார். கிழக்கு மூலமாக சேவை சாதிக்கிறார். தாயார் பூர்வாதேவி பூர்ணவல்லி. பெருமாளுக்குரிய தீர்த்தம் கதம்ப தீர்த்தம். இந்தக் கோயிலில் ஸ்தல விருட்சம் கதலிப்பழம். கோவில் விமானத்தை ' உத்யோக விமானம்' என்று சொல்வார்கள்.
சிவபெருமானுக்கு திடீரென்று ஒரு ஆவேசம் வந்தது. தன்னைப் போல மூன்று தலைகளை உடைய பிரம்மதேவன் வயது ஆத்திரம் கொண்டார். திடீரென்று ஒரு நாள் பிரம்மதேவனின் மூன்று தலைகளில் ஒன்றை கொய்து வீசி எறிந்து விட்டார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
தன் கையிலிருந்து விலக மறுத்த கபாலத்தை கண்டு பிரம்ம தேவனுடைய சாபம் ஏற்பட்டு விட்டதை அறிந்த சிவபெருமான், தன் கையிலிருந்த கபாலம் விலகவும், பிரம்ம தேவரின் சாபம் நீங்கவும் என்ன வழி என்று விஷ்ணுவிடம் கேட்டார். இதற்கு விஷ்ணு திருக்கரம்பனூரில் தன்னுடன் குடிகொண்டிருக்கும். மகாலட்சுமி அணுகி, அவள் கையால் அந்த கபாலத்தில் பிக்ஷை இடச் செய்தாள் கபாலமும் மறைந்து போகும். பிரம்மகத்தி தோசம் விலகும் என்று வழிகாட்டினார். விஷ்ணுவின் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு. சிவபெருமான் திருக்கரம்பனூர் கோவிலுக்கு பிச்சாண்டவராக வந்தார். மகாலட்சுமியும், சிவபெருமானுடைய வேண்டுகோளை ஏற்று அவர் கையிலிருந்த கபாலத்தில் பிச்சை இட கபாலமும் மறைந்தது. சிவபெருமானுக்குரிய பிரம்மஹத்தி தோஷமும் விளங்கியது என்பது இதன் ஸ்தல புராணம்.
திருமங்கையாழ்வாருக்கும் கதம்ப மகரிஷிக்கும் உபரிசரவஸு முனிவருக்கும் பெருமாள் நேரடியாகவே தரிசனம் கொடுத்த தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
எப்பேர்ப்பட்ட பாவம் செய்தாலும் அவர் எங்கெங்கு சென்று பாவத்தைப் போக்க சாந்திகள் செய்தும் பலனில்லாமல் போனவர்கள், கொலை செய்து தப்பித்துக் கொண்டவர்கள், குடும்பத்தைக் கெடுத்து சாபத்தை பெற்றவர்கள், ஆத்திரத்தால் அனைவரையும் மனம் புண்படுத்தி அதிகாரத்தால் கொள்ளையடித்தவர்கள், வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயினால் மருத்துவ குணம் இல்லாமல் துடிப்பவர்கள் அனைவரும் இந்த புருஷோத்தமன் கோவிலுக்கு வந்து மூன்று நாள் தங்கி பிரார்த்தனை செய்தால் அவர்கள் செய்த அத்தனை பாவங்களும் போவதோடு எம்பெருமாட்டி மகாலட்சுமியின் கருணைக்கும் பாத்திரமாகலாம் என்பது அனுபவப்பட்ட உண்மை.