திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் Sthalasayana Perumal Temple Tirusirupuliyur in Tamil
திருமாலின் பெருமைகள், அவதாரங்களை எண்ணிக்கையில் கணக்கிடுவது என்பது கஷ்டம். ஆயிரமாயிரம் தரிசனங்களை அங்கங்கு தந்து பக்தர்களின் மனதில் பசுமையாக உறைந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலங்களில் திருச்சிறுபுலியூர் எனினும் திவ்ய தேசம் ஒன்று உண்டு. இது மாயவரம் அறந்தாங்கி மார்க்கத்திற்கு செல்லும் மாங்குடி ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. அமைதியும் கருணையும் நிறைந்த இயற்கை அழகோடு காணப்படுகிறது.
அரிசிலாற்றின் கிளை நதிக்கரையில் வடபகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு மேற்காக 142 அடி அகலமும் வடக்கு தெற்காக 225 அடி நீளமும் கொண்டு தெற்கு நோக்கி 72 அடி உயரம் 5 நிலை இராஜகோபுரம் அதோடு இரண்டு பிரகாரங்களுடன் 25 அடி உயரம் கொண்ட மூன்று நிலை கோபுரத்துடன் அற்புதமாக காணப்படுகிறது. மூலவர் அருள்மா கடலமுதன் பாலசயனம். திரு நாபியில் பிரம்மன் திருவடிகளில் கன்வ முனிவர் புலிக்கால் முனிவர் அமர்ந்திருக்கிறார்கள். உற்சவர் கிருபாசமுத்திர பெருமாள். தாயார் திருமாமகள் நாச்சியார். தீர்த்தம் திருவனந்த புஷ்கரணி மானஸ் புஷ்கர்ணி. விமானம் நந்தவர்த்தன விமானம். தலவிருட்சம் வில்வம்.
ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டு ஒன்றோடொன்று போரிட தொடங்கின. கருடனுடைய வீரத்தை கண்டு பயந்த ஆதிசேஷன் பல இடங்களில் ஓடித் திரிந்து கடைசியில் இத்தலத்தை அடைந்து புஷ்கரணியில் திருமாலைக் குறித்து தவம் செய்தது. ஆதிசேஷனுக்கு அபயம் தந்து தன்னுடைய திருவனையாகக் உண்டு செய்வித்தார். கருடன், ஆதிசேஷனை தேடி இங்கு வந்தபோது, திருமாலும் சயனமாக ஆதிசேஷன் மாறி இருப்பதை கண்டு ஒன்றும் செய்யாமல் விக்கித்து போனான். அப்போது ஆதிசேஷன், 'கருடா சௌக்கியமா!' என்று கேட்க, ' இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்கியம்' என்று கருடன் சொல்லிவிட்டு சென்றதாக வரலாறு.
சிதம்பரத்திலுள்ள நடராஜப் பெருமானிடம் வியாக்ரபாத முனிவர் தனக்கு மோட்சம் வேண்டும் என்று கேட்க நடராஜப் பெருமான், முனிவரை இந்த திருத்தலத்திற்கு சென்று திருமாலை நோக்கி தவம் செய்தால், ஸ்ரீ வைகுண்ட பதவி கிடைக்கும் என்று சொன்னார். வியாக்ரபாத முனிவரும் இங்கு வந்து தவம் செய்து மோட்ச நிலையை அடைந்தார். அதனால் இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. புஜங்க சயனத்தில் மிகச்சிறிய உருவத்தில் பெருமாள் காட்சி கொடுக்கிறார். சூரியன், அனந்தன், துர்வாசர் மணவாள முனிவர் ஆகியோர் திருமாலை வழிபட்டு தரிசனம் பெற்றவர்கள்.
பரிகாரம்
நாகதோஷம் உள்ளவர்கள் தங்கள் தோசத்தை நிவர்த்தி செய்யவும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெறவும் குடும்பத்தில் உள்ள பகை குறைந்து நல்லபடியாக வாழ விரும்புவோர்க்கும், கோர்ட் விஷயங்களில் சாதகமான தீர்ப்பு பெறவேண்டும் என்று துடிப்பவர்களுக்கும் இந்த ஸ்தலம் நன்மைகளை அள்ளித் தருகிறது. நிர்ப்பயமாக வாழ வேண்டுவோர், எதிரிகளால் ஆபத்து ஏற்படக் கூடாது என்பவர்கள் இங்கு வந்து மூன்று நாள் தங்கி பெருமாளை பிரார்த்தனை செய்தால் போதும். நல்ல பலனை அடைவார்கள்.