திருநந்திபுர விண்ணகரம்

 விண்ணிலேயும் சரி மண்ணிலேயும் சரி எல்லோருக்கும் அபாயஹஸ்தம் தருபவர் திருமால் தான் என்பதை ஏகப்பட்ட புராணங்கள் விளக்கிக் காட்டி இருக்கிறது.  விண்ணிலே திருமால் எப்படி இருப்பார் என்பதை திரு நந்திபுரவிண்ணகரப்  பெருமாளை தரிசித்தால் தெரிந்துவிடும்.  இந்த அருமையான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 5  கிலோமீட்டர் தொலைவில் கொற்கை அருகில் உள்ளது.  நாதன் கோயில் என்றும் தட்சின  ஜகந்நாதம் என்றும் பெயர்கள் உண்டு.செண்பகாரண்யம் என்று  இந்த தலத்திற்கு  சிறப்புப் பெயரும் இப்போது சொல்லப்படுகிறது.

 மூலவர் விண்ணகர பெருமாள் என்னும் ஜெகந்நாத பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்.  தாயார் செண்பகவல்லி,  தீர்த்தம் நந்தி புஷ்கரணி.  விமானம்  மந்தார விமானம்.  பகவான்,  நந்தி தேவருக்கும் சிபி சக்கரவர்த்திக்கும் நேரிடையாக தரிசனம் கொடுத்து அருள்பாலித்த ஸ்தலம்.  இந்த சங்கதி தற்சமயம் வானமாமலை மடத்து ஆதீனத்தின் நிர்வாகத்தின் கையில் இருக்கிறது.  இறைவனுக்கு  நந்திதாசன்  என்றும் வரலாறு கூறுகிறது.

நந்திகேஸ்வரர் ஒரு சமயம் மிக அவசரமாக மகாவிஷ்ணுவை பார்க்க வேண்டியிருந்தது.  வைகுண்டத்திற்கு சென்ற  நந்தி தேவரை துவார பாலகர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் நந்தி தேவரோ  துவாரபாலகர்களை மதிக்காமல் விஷ்ணுவை பார்க்க முயன்றார்.  இதனால் துவார பாலகர்கள் நந்திதேவருக்கு சாபமிட்ட தோடு. விஷ்ணுவையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டனர்.  ஏமாற்றமும் அவமானமும் அடைந்த நந்தி தேவர் நேராக சிவபெருமானிடம் சென்று முறையிட சிவபெருமான் "இந்த செண்பகாரண்ய தலத்திற்கு சென்று  திருமாலை நோக்கி தவம் செய்.  பகவான் உன்னை தேடி வந்து அறிவார்"  என்றார்.  அதன்படியே நந்தி தேவர்,  இங்கு வந்து தவம் புரிய திருமால் பிரத்யக்ஷமாக நந்திதேவருக்கு தரிசனம் கொடுத்து துவாரபாலகர் தந்த சாபத்தையும் நீக்கினார்.  அதனால் இந்தத் ஸதலம்  திருநந்திபுர விண்ணகரம்  என்று பெயர் ஏற்பட்டது. வைகானஸ ஆகமப்படி பெருமாள் கோயிலில் தெற்கில் நந்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சிபி  சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் அடைந்த புறாவைத்  துரத்தி வந்த கழுகு தனது தொடை சதையை வெட்டி கொடுத்தார்.  இந்த அற்புதக் காட்சியை காண திருமாலே இங்கு நேரில் வந்து வாழ்த்தி வந்ததாக செய்தி உண்டு.  பெருமாள் கிழக்கே இருந்தார்.  சிபியின்,  கருணை உள்ளத்தை காண எடைக்கு எடையாக தன் மாமிசத்தை வைத்ததை கான சட்டென்று மேற்கு திசையில் இடம் மாறினார் என்பது ஸ்தல வரலாறு.  திருமங்கையாழ்வார் நந்திபுர பெருமாளை பற்றி பாடி இருக்கிறார்.

பரிகாரம்

கோர்ட் வழக்குகள் சாதகமாக மாறுவதற்கும்,  கோபப்பட்ட பெரியவர்களது உண்மையான சாபம் பலிக்காமல் போவதற்கும் உயிருக்கு ஆபத்தான பணியில் இருப்பவர்கள்,  தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும்,  அரசியல்வாதிகள்  நல்லபடியாக ஜெயிக்கவும்,  முக்கியமான அரசாங்க பொறுப்பில் இருப்பவர்கள் எந்தவித  வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக பணிபுரியவும் இந்த ௯ேத்திரத்திற்கு வந்து ஒரு நாள் தங்கி பிரார்த்தனை செய்து கொண்டாள் அத்தனை பிரச்சினைகளும் பஞ்சாக பறந்துவிடும்.  ஆனந்தம் மட்டும்  என்றும் நிற்கும்.

Quickly Find What You Are Looking For