திருநறையூர் நாச்சியார் கோவில் Thirunarayur Nachiyar Temple in Tamil
பெரியவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுவது சாப விமோசனத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். பகவான் நேரடியாக சில அனுகிரகங்களை செய்கிறார். பெரும்பாலான உதவிகளை முன்பின் தெரியாதவர் மூலம் செய்கிறார். ஆசாரியனுடைய அனுக்கிரகம் பெற்று விட்டால் பகவானுடைய கருணைக்கு விளக்கி விட்டோம் என்பது பொருள். வைணவ சித்தாந்தமே ஆச்சாரியன் மூலம் பகவானை சரணாகதி அடைவது தானே பொருள்.
ஆனால் திருநறையூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. எல்லோருக்கும், ஆச்சாரியன் தான் ஸமாச்சரயனம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் தனது பக்தன் ஒருவருக்கு பகவானே இத்தளத்தில் ஸமாச்சரயனம் செய்து வைத்தார் என்பது ஆச்சரியம்தானே.
கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்திருப்பது நாச்சியார் கோயில். மிகப் பிரம்மாண்டமான இந்தக் கோயில் அஞ்சு ஏக்கர் நிலப்பரப்பில் 690 * 288 அடி நீள அகலமும் கொண்டு 75 அடி உயரமுள்ள அஞ்சு நிலையான ராஜ கோபுரத்தையும், அஞ்சு பிரகாரங்களையும் தன்னுள் கொண்டது. மூலவர் சீனிவாசப்பெருமாள் நின்ற கோலம். தாயார் வஞ்சுள வல்லி. தீர்த்தம் மணிமுத்தா நதி என்கிற குளம் இது 684*225 நீள அகலம் கொண்டது. இதைத் தவிர ஸங்கர்ஷன பிரத்யும்ன, அனிருத்தன், ஸாம்ப என்ற நான்கு தீர்த்தங்களும் உண்டு. விமானம் ஸ்ரீனிவாச விமானம் ஹேம விமானம் விருட்சம் வில்வம், மகிழமரம்.
படைப்புத் தொழிலை செய்து வந்த பிரமதேவன் ஒரு முறை சரியாக தன் ஒளியிலே செய்யாததால் முனிவர்களால் சாபம் பெற்றான். சிவபெருமானும் பிரம்மனை கைவிட்டார். அப்போது திருநறையூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளை, உள்ள சங்கர்ஷண குளத்தில் நீராடியபின் வழிபட்டால் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் விலகும் என்று அசரீரி கூறியதால், பிரம்மன் இங்கு வந்து வழிபட்டார். சாபவிமோசனம் பெற்றார்.
இதேபோல இந்திரனும் தன் மேலிருந்த பாவத்தை போக்க இந்த தளத்தில் உள்ள 'அனிருத்தன்' தீர்த்தத்தில் நீராடி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்து நீண்ட நாள் சாபத்தைப் போக்கிக் கொண்டான். மற்றுமொரு முக்கிய தீர்க்கமான ஸாம்பதீர்த்தத்தில் ஸப்தரிஷிகளும் அமர்ந்து சீனிவாச பெருமாளை நோக்கி தவம் செய்தனர். பானுதத்தன் என்னும் அரக்கனுக்கும் பகவான் கருணை காட்டி அவனது பாவங்களையும் தோஷங்களையும் தீர்த்தார் என்பது வரலாறு.
இங்குள்ள வஞ்சுள மரத்தடியில் மேதாவி முனிவர் பெண் குழந்தையான நீளா தேவியை கொண்டு அதற்கு வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து பின்னர் இங்குள்ள இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். திருமகளுக்கு ஸ்ரீரங்கம், பூமி மகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், நீளா தேவிக்கு திருநறையூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள கல் கருடன் விசேஷமானது. கருட வாகனத்தின் பொழுது சன்னதியில் நாலு பேர்கள் மட்டுமே தூக்கி வரும் கருட வாகனம் சிறுகச் சிறுக கனத்து அதைத் தூக்க பின்னர் 64 பேர்கள் தேவைப்படும். பெருமாள் கருட வாகனத்திலும் தாயார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுவது காண கண் கோடி வேண்டும். திருமங்கையாழ்வாருக்கு பெருமாள் ஸமாச்ரயணம் செய்து வைத்த தலம் என்பது மிகவும் சிறப்புடையது. திருமங்கையாழ்வார் 110 பாசுரங்களை இப்பெருமான் மீது பாடியிருக்கிறார்.
பரிகாரம்
முன்னோர்கள் சாபம் உடனடியாக நீக்கவும் தெய்வ குற்றம் செய்திருந்தாலும் அந்த 'பழி' விலகவும். துஸ்டர் களோடு சேர்ந்து செய்யத் தகாத காரியங்களை செய்து அனைவருடைய கோபத்துக்கு ஆளாகி இருந்தாலும் பஞ்சமா பாதகங்களை செய்திருந்தாலும், பெரும்பாவங்களை போகவும் அங்கு வந்து நான்கு வகை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து சீனிவாச பெருமாளை சரணடைந்து விட்டார் அத்தனையும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் தென்றலும் வீசும். மகான்களது அனுகிரகமும் கிடைக்கும்.