திரு ஊரகம் உலகளந்த பெருமாள் கோயில் Ulagalantha Perumal Temple in Tamil
புகழ்பெற்ற திருக்கோயில்களை கொண்ட காஞ்சிபுரத்தில், எத்தனையோ வரலாற்று பெருமைமிக்க கோயில்கள் உண்டு. எம்பெருமான் சேவை சாதிப்பதை எப்படி எல்லாம் பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பார்க்கலாம். திருமாலும் தான் எடுத்த சில அவதார காட்சிகளை தன்னுடைய பக்தர்கள் வேண்டி கேட்டபொழுது இடம், பொருள், ஏவல் பார்க்காமல் மறுபடியும் கார்த்தி பக்தர்களை பரவசப்படுத்தி இருக்கிறார். அப்படி பகவான் விடுத்த அவதார காட்சிகளில் ஒன்றுதான் உலகளந்த பெருமாள் தரிசனம். அதை இங்கே ஆனந்தமாக தரிசனம் செய்யலாம்.
சுமார் 60000 சதுர அடி பரப்பில் மேற்கு நோக்கி 3 நிலை இராஜகோபுரம் இரண்டு பிரகாரங்களையும் உடையது. மூலவர் உலகளந்த பெருமாள் நின்ற திருக்கோலம். விமானம் ஸார ஸ்ரீகர விமானம். தீர்த்தம் நாக தீர்த்தம். எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் 35 அடி உயரமும் 24 அடி கொண்ட நிலையில், தனது இடது காலை விண்னோக்கி தூக்கியும் இடது கரத்தின் இரண்டு விரல்களையும் வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீ ஆரணவல்லித் தாயார்.
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் வேண்டி, வாமன அவதாரம் எடுத்த இறைவன் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைக்க மகாபலி இறைவனது திருவடியின் கீழ் அகப்பட்டு பாதாள உலகில் வீழ்ந்தான். அப்பவும் மகாபலி சக்கரவர்த்திக்கு ஒரு ஆசை. பகவானின் திருக்கோலத்தை முழுமையாக காண இயலவில்லையே என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கி தவம் செய்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் இந்த உலகத்திலேயே 'மகாபலி'க்கு உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாக தந்தார். திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பாசுரம் செய்த ஸ்தலம்.
பரிகாரம்
எத்தனையோ தவறுகளை செய்து கொண்டிருந்தாலும் அத்தனையும் தாண்டி பகவான் மீது பற்று வைத்து நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் நிச்சயம் மன்னிப்பு கேட்டு விடலாம். பகவான்தான் கருணைக் கடலாயிற்றே. நிச்சயம் நம்மை மன்னிப்பது ஓடு நேரடியாகவும் காட்சி தந்து நம்மை குறை இல்லாத மனிதனாக வாழ வைப்பார் என்ற புனிதமான பக்தியோடு இந்த கோயிலுக்கு வருகிறவர்களுக்கு மகாபலி சக்கரவர்த்திக்கு காட்சி தந்தது போல் பெருமாள் தினமும் காட்சி தந்து அருள்வார். தெரிந்து செய்திருந்தாலும் இல்லை, தெரியாமல் செய்திருந்தாலும் அத்தனை பாவங்களையும் மன்னித்து அனுக்கிரகம் கிடைக்கும் அருமையான புனிதத் ஸ்தலம் இது.