திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் Vaithamanidhi Perumal Temple in Tamil
தர்மம் எங்கிருந்தாலும் அதற்கு ஏதாவது சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனாலும் தர்மம் தான் கடைசியில் ஜெயிக்கும் என்பதை படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். ஆனால் தர்மத்தை நேரடியாகவே அதர்மம் சந்தித்து, வலுவில் போரிட்டு பின்னர் அதர்மம் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அந்த காலகட்டத்திலேயே நடந்திருக்கிறது.
ஆழ்வார்களின் நவதிருப்பதிகளில் ஒன்றான இந்த திருக்கோளூர், தென் திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே ஒரு கிளைப் பாதையில் திரும்பினால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கோளூரை அடையலாம். மூலவர் வைத்தமாநிதி பெருமாள், நிக்ஷேபவித்தன் என்று மற்றுமொரு பெயரும் உண்டு. தாயார் குமுதவல்லி, கோளூர் வல்லி, தீர்த்தம் குபேர தீர்த்தம், தாமிரபரணி ஆறு. விமானம் ஸ்ரீகர விமானம். குபேரனுக்கும், மதுரகவியாழ்வாருக்கும் திருமால் பிராத்யட்சம்.
ஒரு தடவை குபேரன் பார்வதி தேவியிடம் மரியாதை இல்லாமல் நடக்க. பார்வதிதேவி குபேரனை சபித்துவிட்டார். இதனால் குபேரனை சுற்றி சூழ்ந்து கொண்டிருந்த எல்லா வகை செல்வங்களும் அவனை விட்டு விலகி விட்டன. உடனே குபேரன் இந்த கோளூருக்கு வந்து திருமாலின் கருணைக்காக நீண்ட நாட்கள் தவம் புரிந்தான். பகவானும் பார்வதிதேவியின் சாபத்தைப் போக்கி நவநிதிகளை மீண்டும் குபேரனுடன் இணைய வைத்தார். மதுரகவி ஆழ்வார் அவதாரத் ஸ்தலம். தர்ம தேவதை இங்கு தங்கி தினமும் திருமாலை வழிபட்டுக் கொண்டிருந்தாள். இதனை கெடுப்பதற்காகவே அதர்மம் இங்கு வந்து வலிய சண்டை போட்டது. இதில் அதர்மம் தோல்வியடைந்து ஓடிவிட்டதால் இந்த ஸ்தலத்திற்கு 'அதர்ம பிசுனம்' என்று ஒரு பெயரும் உண்டு. நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
எந்தவொரு சுப காரியத்தை செய்ய நினைத்தாலும் தடங்கல் வந்தாலும், குழந்தைகளால் பெரிய பிரச்சினை எதுவும் உண்டாகாமல் தடுக்கவும், நல்லவர்களின் கோபத்திற்கு ஆளாகி மனக் கஷ்டம் படுபவர்களும் இந்த ஸ்தலத்தில் வைத்தமாநிதி பெருமாளை நேரடியாக சந்தித்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால்ல வறுமை இருக்காது. காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த அபாக்கியம் விலகும் என்பது சத்தியம்.