திருத்தெற்றியம்பலம் பெருமாள் கோயில் Thiruthetriyambalam Temple in Tamil

நின்ற  திருக்கோலத்தைக் கண்டு திருப்தி அடையாதவர்கள் பள்ளிகொண்ட பெருமாளாகப்  பார்க்க வேண்டும்  என்று ஆசைப்பட்டால் அதையும் மிகப் பிரசித்தி பெற்ற  திருநாங்கூரிலேயே  காணமுடியும்.  பக்தர்கள் கேட்காமலேயே அவர்களது உள்ளத்தை முக்காலமும் உணர்ந்த பெருமாள்.  'சொன்னபடி கேட்கும்  குழந்தை போல'  பக்தர்களுக்கு பள்ளிக்கொண்ட சயனத்தில் காட்சி தரும் இடம் தான் திருத்தெற்றியம்பலம்.  இதுவும் திருநாங்கூரிலேயே இருக்கிறது.

 மூலவர் செங்கண்மால் பெருமாள்,  ஆதிசேஷன் மீது தெற்குப் பக்கத்தில் தலை வைத்து கொண்டு பள்ளி கொண்டிருக்கிறார்.  தலைப்பக்கத்தில் திருமகள்.  கால் பக்கத்தில் பூமாதேவி, தாயார்:  செண்பகவல்லி.  தீர்த்தம் சூரிய புஷ்கரணி,  விமானம் தேவ விமானம்.  உற்சவர் இலட்சுமி நாராயணன்.  திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.  இத்தல இறைவன் தை அமாவாசைக்கும்  மறுநாள் திருநாங்கூர் கருட சேவைக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம்.

சூரியனுக்கு திடீரென்று  பிரகாசமும் வலிமையும் ஒரு சாபத்தால் குறைய ஆரம்பித்தது.  தனது பிரகாசம் குறையாமல் இருக்கவும் பெற்ற சாபத்தை உடனடியாக  போகவும் வழிதெரியாமல் சூரியன்   திண்டாடி கொண்டிருந்தபொழுது பூலோகத்தில் திருத்தெற்றியம்பல  ஸ்தலத்திலுள்ள  புஷ்கரணியில் நீராடி பெருமானைத்  தொழுதால் சூரியன் பழையபடி பிரகாசம் பெறுவதோடு சாபம் நீங்க பெறுவான் என்று சொல்லக்கேட்டு சூரியன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் பெற்றான்.  சூரியன் நீராடிய புஷ்கரணிக்கு சூரிய புஷ்கரணி என்ற பெயர்.  சூரியனைப் போலவே இங்கு வந்து தன் சாபம் நீங்கி பெருமாள் தரிசனம் கண்டவர்  ஆனந்தாழ்வார் என்னும் பரமபக்தர்.

 பரிகாரம்

 செல்வாக்கு குறைந்து கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களும், புகழ் கீர்த்தி,  பெருமையை தலைமுறை தலைமுறையாக காப்பாற்ற வேண்டுமென்று  ஆசைப்படுபவர்களும்,  குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்கள்,  குழந்தைகள் இருந்தும் அவர்களால் மனக்கஷ்டம் அடைபவர்கள்,  வயோதிக காலத்தில் நோயினால் வேறு பல சௌகரியங்களை இழக்கக் கூடாது என்று எண்ணுபவர்கள், தோல்விகளைக் கண்டு துவண்டு போனவர்கள் ஆகியோர் இந்த ஸதலத்திற்கு வந்து  ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து இங்கே செய்ய வேண்டிய பரிகாரங்களை முறைப்படி செய்தால் செங்கண்மால் பெருமாள் அனுகிரகம் பெற்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தொடர்ந்து பெறுவார்கள்.  பழைய பாவங்கள்,  விட்ட குறை தொட்ட குறை தோஷங்கள் கூட  விலகிவிடும்.

Quickly Find What You Are Looking For