திருவண் புருஷோத்தமம் Thiruvan Purushothamam Temple in Tamil
'திருநாங்கூர்' என்பது சின்ன ஊராக இருந்தாலும் பகவானின் கடைக்கண் பார்வை மிக அதிகமாகப் பெற்ற ஊர் என்பதால் பெருமாள் கடாட்சம் பொருந்திய ஊர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்த சின்னஞ்சிறிய ஊரில் ஒரே தெருவில் திருமணி மாடக் கோவில், அரிமேய விண்ணகரம், திருத் தேற்றியம்பலம், திருவண் புருஷோத்தமம் என்ற நான்கு கோயில்களும் அமைந்திருக்கின்றன. இவையனைத்தும் பெருமாளின் பெருமையையே பறைசாற்றுவதால் 108 திவ்ய தேசங்களுக்குள் தனி இடம் பெற்று சிறப்பாக மிளிர்கின்றன. திருநாங்கூர் சீர்காழியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சிறிய கோவில், ஒரு பிரகாரம், சுற்று மூலவர் புருஷோத்தமன். கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். தாயார் புருஷோத்தம நாயகி, தீர்த்தம் திருப்பாற்கடல் என்ற பெரிய திருக்குளம். விமானம் சஞ்சீவி விக்ரகம் தலவிருட்சம் வேம்பு. திருமாலுக்கு புருஷோத்தமன் என்ற திருப்பெயர் ஏற்பட்ட முதல் ஸதலம் என்று சொல்லப்படுகிறது. தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடக்கும் கருட சேவை உலகளாவிய புகழ் பெற்றது. திருமங்கையாழ்வார் மட்டுமல்ல. ஸ்ரீ மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த ஸதலம் என்ற பெருமையும் உண்டு.
இந்தக் கோயிலைப் பற்றி பராசவனப் புராணத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய முனிவர் விக்கிரபாதர். இவர், வெகுநாள் குழந்தை இல்லாமல் இருந்தார் புருஷோத்தமனான திருமாலை தினமும் வேண்டிக் கொண்டிருந்தார். பெருமானின் அருளால் அவருக்கு ' உபமன்யு' என்ற ஆண் குழந்தை பிறந்தது. தன் பெயரைச் சொல்லக் கூடிய அளவுக்கு வாரிசு பிறந்த சந்தோசத்தால் திருமாலின் திருவடியையே நினைத்து மனம் உருக தியானம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் வியாக்கிரபாதர் பெருமாளை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரது மனைவி வேறு வேலையாக வெளியே சென்றபோது வீட்டில் தனியாக இருந்த ' உபமன்யு' பசி தாங்காமல் அழுதான். குழந்தையின் அழுகுரலைக் கேட்ட புருஷோத்தமன் நாயகியான இறைவி ' உபமன்யு' வின் பசியை போக்க பாலமுது ஊட்டினாள். இந்த வியத்தகு சம்பவத்தை அறிந்த வியாக்கிரபாதர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னொரு சம்பவமும் உண்டு 'குமேதஸ்' என்பவன் படிப்பறிவு எதுவும் இல்லாதவன். இதனால் அவமானப்பட்ட 'குமேதஸ்' இங்குள்ள திருமாலிடம் வந்து கதறி அழுதான். மக்களின் கண்ணீரை போக்க பகவான் புருஷோத்தமன் முன்வந்தார். திருமாலின் தெய்வ கடாக்ஷத்திநால் 'குமேதஸ்' இந்நாள் மிகச் சிறந்த பண்டிதனாக மாறினான்.
பரிகாரம்
வறுமையினால் துடிப்பவர்களும், கல்வியறிவு இல்லாமல் கலங்கி கொண்டிருப்பவர்களும் குழந்தைகள் எதிர்கால வளர்ச்சி மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இளம் வயதில் பெற்றோரை இழந்து, தகுந்த பாசமும் அரவணைப்பும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் தவிப்பவர்களும் திருநாங்கூர் புருஷோத்தமன் அடைக்கலம் தருவார். வாழ்வை மேம்படுத்தி காட்டுவார். இந்தக் கோயிலுக்கு வந்து மனதார பிரார்த்தனை செய்பவர்களுக்கு எந்தக் குறையும் எதிர்காலத்தில் ஏற்படாது. எனவே இருந்த குறையும் உடனடியாக விலகி விடும்.