திருவரகுணமங்கை பெருமாள் கோயில் Thiru Varagunamangai Perumal Temple in Tamil
திருமால் அவதாரங்களை எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும் எத்தனையோ ஏழை மக்களுக்கு பல்வேறு வழிகளில் அருள்பாலித்து அவர்களது மனக் கஷ்டங்களையும் போக்கி வித்தியாசம் பார்க்காமல் செய்து காட்டி இருக்கிறார். யாரோ ஒருவர் எந்த ஸ்தலத்திலிருந்து தன்னை மனமுருக பிரார்த்தனை செய்திருந்தாலும், செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் கண்முன் தோன்றி இருக்கிறார். அவர்களது வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். இதற்கு ஒரு உதாரணமாக திருவரகுணமங்கை திருத்தலமே சாட்சி.
திருநெல்வேலி - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருவரகுணமங்கை என்னும் அருமையான திருத்தலம். மூலவர் விஜயாபாஸனப் பெருமாள். ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருக்கும் திருக்கோலம். தாயார் வரகுணவல்லி தாயார், வரகுண மங்கை தாயார், உபயநாச்சியார் என்று வேறு பெயர்களும் உண்டு. தீர்த்தம் அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி. விமானம் விஜயகோடி விமானம். அக்னி பகவானுக்கு ரோமச முனிவருக்கும், சத்திய வானுக்கும் திருமால் நேரடியாக தரிசனம் கொடுத்த இடம்.
கோயிலின் உண்மையான வரலாறு மிகச் மிகச் சிறப்பானதாக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு சிறுகுறிப்பு தான் நமது கையில் கிடைத்திருக்கிறது. 'வேதவித்' எனும் பக்தர் விஷ்ணுவை தரிசனம் செய்வதற்காக கடுமையாக தவம் இருந்தார். பகவானும் வேதவித்தின் கோரிக்கையை ஏற்று தரிசனம் கொடுத்தார். இதனால் விஜ்யாஸனர் என்னும் திருநாமம் பகவானுக்கு ஏற்பட்டது. இதைத்தவிர வேறு நிறைய சிறப்பான சம்பவங்கள் நடந்து இருக்க வேண்டும். காலவெள்ளத்தில் இவைகள் அடித்துச்செல்லப்பட்டு இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.
பரிகாரம்
கருணையின் மொத்த வடிவம் திருமால் என்பதை இந்த பாரத தேசமெங்கும் எடுத்துக்காட்டிய பெருமாள் எங்கேயோ ஒரு குக்கிராமத்தில் உள்ள பக்தருக்கும் இறங்கி இருக்கிறார் என்றால் மிக சாதாரண மனிதன் கூட இந்த ஸ்தலத்தில் பெருமாளை நோக்கி தவம் செய்தாள் இந்த பூலோகத்தில் தைரியமான வாழ்க்கையைப் பெறலாம். மேலும் பெருமாளின் கருணைக்குப் பாத்திரமாகலாம் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த அருமையான திருக்கோயில்.