திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் Nithya Kalyana Perumal Temple in Tamil
பெரும்தொல்லையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பக்தர்களை உடனுக்குடன் காப்பாற்றவேண்டிய பொறுப்பு திருமாலுக்கு உண்டு. படைப்பதும் அளிப்பதும் மிக எளிது. ஆனால் காப்பது என்பது கடினமான செயல் என்று புராணங்கள் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பருவ வயது வந்ததும் திருமணம் என்ற ஒன்று மட்டும் சரியானபடி செய்து வைக்க வில்லை எனில் அந்தக் குடும்பமே நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. அப்படிப்பட்ட திருமணத்தடைகளை மாற்றி திருமணத்தை நடத்தி வைக்கும் பெரும் புண்ணியத்தை பகவான் திருவிடந்தை நகரில் தினமும் செய்து வருகின்றார் என்றால் எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது.
சென்னைக்கு தெற்கே 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருவிடந்தை கோவில். இதற்கு இடவெந்தை. வாமகவீ புரி நித்ய கல்யாணபுரி. ஸ்ரீபுரி, வராகபுரி என்று ஐந்து விதமான பெயர்களும் உண்டு. இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் உள்ளது இந்தக் கோயில். மூலவர் இலட்சுமி வராகப் பெருமாள். 9 அடி உயரம் கொண்டு காட்சி அளிக்கிறார் உற்சவர் நித்திய கல்யாண பெருமாள். தாயார் கோமளவல்லி தாயார். தீர்த்தம் கல்யாண தீர்த்தம் வராஹ தீர்த்தம். விமானம் கல்யாண விமானம். யானை தந்தத்தால் செய்யப்பட்ட பல்லாக்கு உண்டு. திருமங்கையாழ்வார் மணவாள முனிகள் பாசுரம் பாடி இருக்கிறார்கள்.
இறைவன் வராக வடிவில் காட்சி தருகிறார். வலது கரத்தில் சக்கரமும் இடது கையில் சங்கும் கீழ் இரு கைகளில், இடது கை பூமகளின் திருவடியை தூக்கியும் வலதுகை அணைத்துக் கொண்டும், இடது கால் ஆதிசேஷனின் தலை மீது வைத்துக் கொண்டும் வலதுகால் பூமியின் மீது பட்டுக் கொண்டும் அருள்பாலிக்கிறார். பலி என்ற அரக்கனுக்கும் காலவ முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு திருமால் தரிசனம் தந்த இடம்.
காலவ முனிவரின் 360 பெண்களையும் திருமால் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக்கொண்டு 360 கன்னிகைகளை 360 நாட்கள் திருமணம் செய்து காட்சியளிப்பதால் இறைவனுக்கு நித்திய கல்யாணன் என்று பெயர். இவர்களில் மூத்த கணினியின் பெயர் கோமளவள்ளி.
பரிகாரம்
திருமணமாகாத கன்னியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இங்குள்ள பெருமாளை தரிசித்து முறைப்படி செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்து விட்டால் ஓராண்டு காலத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நடந்துவிடும் என்பது இந்த தலத்தின் மிகப் பெரிய சிறப்பு. திருமண தோஷங்கள், முன்னோர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தெற்கே திருமணஞ்சேரி என்னும் ஸ்தலத்திற்கு செல்பவர்கள் கூட இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து விட்டுப் போவதும் நற்பலன்கள் அடைவதும் நடைமுறை உண்மையாகும்.