திருவேங்கடம்
இன்றைக்கு இந்தியாவில் உள்ள எல்லா மக்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு சகலவிதமான தொல்லைகளிலிருந்தும் காத்தருளும் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் திருப்பதி அலைமீது வாசம் கொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் தான். ஆண்டுகள் பல ஆயிரம் ஆனாலும் அளவற்ற பக்தர்களையும் ஒவ்வொரு நாளும் உருவாக்கி அவர்களுக்கு அருள் பாலித்து வரும் அற்புதம் வேங்கடமுடையானுக்கே சொந்தம். எங்கிருந்து நினைத்தாலும் அவர் தம் கருணை நமக்கெல்லாம் கிட்டிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.
சென்னை மும்பை ரயில் பாதையில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது திருப்பதி மலைமேல் இருப்பதால் மேல் திருப்பதி. கீழ்த் திருப்பதியில் மூலவர் கோவிந்தராஜா புஜங்க சயனம் தாயார் புண்டரீக வல்லி மேல் திருப்பதியில் மூலவர் திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன், வெங்கடாஜலபதி, பாலாஜி என்று வேறு பெயர்களும் உண்டு. நின்ற திருக்கோலம். உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர். தீர்த்தம் சேஷாசல, சுவாமி புஷ்கரணி பாபவிநாச நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, கோனேரி தீர்த்தம் இதைத் தவிர வைகுண்ட, சக்ர, ஜாபாவி, வருண, ஆகாசகங்கை, பாபவிநாசம் பாண்டவ, குமாரதாரை, இராமகிருஷ்ணன், தும்புரு, சேஷ், ஸனகஸந்தன, யுத்தகள, சீதம்ம தீர்த்தங்களும் உண்டு. விமானம் ஆனந்த நிலைய விமானம். தொண்டைமான் ஆறுமுகன் ஆகியோருக்கு பெருமாள் பிரத்தியட்சம்.
ஆதிவராக சன்னதி புஷ்கரணியின் வடமேற்கு மூலையில் கோயில் உள்ளது. இங்குதான் முதல் தளிகை. பிறகுதான் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நடக்கும். ஏழு மலைகள் தாண்டி கோயில் கொண்டிருப்பதால் ஏழுமலை வாசா என்றும் பெயர். வேங்கடாத்ரி, சேஷாசலம் வேதாசலம், விருதாச்சலம், விருஷபாத்ரி, அஞ்சானத்ரி, ஆனந்தாத்ரி என்பது அந்த ஏழு மலைகளின் பெயர்கள்.
திருப்பதியைச் சேர்ந்த திருச்சானூரில் மூலவர் தாயார் அலர்மேல்மங்கை, தீர்த்தம் பத்ம ஸரோவரம். இந்தக் கோவிலில் பிரம்மா 2 விளக்குகளை ஏற்றி வைத்ததாகவும் அந்த தீபம் இப்பொழுதும் பிரகாசித்து வருவதாகவும் வரலாறு. இதைத் தவிர இந்த மலையையொட்டி சந்திரகிரி பாக்கம் சீனிவாசமங்காபுரம் என்ற சிற்றூரிலும் ஸ்ரீனிவாச பெருமாள் குடிகொண்டிருக்கிறார். மலை மீதேறி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அங்கேயே தரிசனம் கொடுக்க பகவானே விரும்பி செய்த ஏற்பாடு என்பது ஐதீகம். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் திருப்பதி பெருமாள் மீது பாசம் பாடியிருக்கிறார்கள்.
பரிகாரம்
காரியம் நல்லபடியாக வெற்றியடையவும் ஆரோக்கியமான சூழ்நிலை ஆண்டாண்டுகளாக தொடரவும் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சகலவிதமான சௌபாக்கிய தோடு வாழ்நாளைக் கழிப்பதுடன், செய்த பாவங்களைக் களைந்து முக்தி அடையவும் இந்த வேங்கடவனை வேண்டி நேரடியாக தரிசனம் செய்து, முடிந்தால் அங்கப்பிரதட்சிணம் செய்தாள் போதும், வேங்கடவன் வேண்டியதைச் செய்து அருள்பாலிப்பார்.