திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் Tiruvelukkai Temple in Tamil
நமக்கெல்லாம் மன நிம்மதியையும் தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதி தான். எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சர்வசாதாரணமாக நிற்பதற்கு அடிப்படைக் காரணம் பெருமாள் கோயில் என்பது உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, பெருமாளுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது. அப்படி பெருமாளே தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை என்னும் புனிதஸ்தலம். இது காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது.
மூன்று நிலை கோபுரம் ஒரு பிரகாரம் என்று சின்ன கோயிலாக இது காணப்பட்டாலும் மூர்த்தி பெரிது. மூலவர் ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள். இன்னொரு பெயர் ஸ்ரீ முகுந்த பெருமாள். விமானம் கனக விமானம் தாயார் வேளுக்கைவல்லித் தாயார். தீர்த்தம் கனக சரஸ் தீர்த்தம். அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
பிருகு முனிவருக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. இயல்பான வடிவத்தோடு காட்சி தந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்த போது எப்படி இருந்திருப்பார் என்று. இந்த காட்சியை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என்று இந்த தஸ்லத்தில் தவம் கொண்டிருந்தார். பிருகு முனிவரின் வேண்டுகோளை அறிந்து பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக கனக விமானத்தின் கீழ் காட்சி அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
இன்னொரு வரலாறும் உண்டு
இரணியனைக் கொன்று பின்னர் அவரைச் சார்ந்த அசுரர்கள் கூட்டம் நரசிங்க மூர்த்தியை தாக்க வந்தது. அந்த அசுரக் கூட்டத்தை வீறு கொண்டு தாக்கி அவர்களை துரத்தினார் பெருமாள். அவர்கள் நரசிங்க மூர்த்தியின் வேகத்திற்கு அஞ்சி ஓடும் பொழுது அவர்களைத் தாக்கி வந்த பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிக்க இந்த தளத்திற்கு வந்ததும் அப்படியே ஆனந்தமாக இங்கேயே அமர்ந்து விட்டார். ஒருவேளை, ஓடிப்போன அசுரர்கள் திரும்பி வந்தாள் அவர்களை எதிர்க்க இந்த இடமே மிகவும் உத்தமம் என்று பகவான் நினைத்து யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து நின்று தரிசனம் தருகிறார். பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இத்தலத்தை பற்றி பாடியிருக்கின்றனர்.
பரிகாரம்
அன்றாடம் நாம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களுக்காக பயந்து சாகிறோம். எந்த காரியமும் சரிவர செய்ய முடியாமல் ஏதோ ஒரு பயத்தில் நடுங்கி கொண்டிருப்பவர்களும், கெட்ட கனவுகளால் அவதிப்படுபவர்களும், தாதாக்களினால், குண்டர்களினால், தொந்தரவு செய்வதால் கஷ்டப்படுகிறவர்கள், படிக்கமுடியாமல் திண்டாட கூடிய மாணவ மாணவிகளும் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டு அதனால் தன் எதிர்கால வாழ்க்கை வீணாக போய்விடுமோ என்று நினைப்பவர்களும் இங்குள்ள நரசிம்மரை தரிசனம் செய்து தங்கள் உள்ளக் கிடக்கையை பிரார்த்தனையாக செய்தால் அதை பகவான் நல்லபடியாக மாற்றி நடத்தி வைப்பார், மன பயமும் உடனே விலகும்.