திருவைகுந்த விண்ணகரம் பெருமாள் கோயில் Thiruvaikunda Vinnagaram Temple in Tamil
திருநாங்கூரில் அமைந்த மற்றுமொரு புண்ணிய திருக்கோயில். இது பெருமாளுக்கு திருநாங்கூர் மிகவும் பிடித்த இடம் போலும். எனவேதான் அடுத்தடுத்து கோயில் கொண்டு ஆனந்தமாக அமர்ந்திருக்கிறார். சிறிய கோயில் என்றாலும் கீர்த்திகள் நிரம்பியது. பெருமாளின் திருமேனியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும்.
கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. மூலவர் வைகுண்ட நாதன் தாமரை பீடத்தின் மீது வலது காலை மடக்கி குத்திட்டு வைத்து இடது காலை கீழே தொங்க விட்டும் இடது கரம் அரவத்தின் மேல் வைத்தும், பின்னிரு கரங்கள் சக்கரம், சங்கும் தலைக்குப் பின்புறம் ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலம். திருமகள் வலது காலை கீழே தொங்க விட்டு இடது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலை. பூமாதேவியும் இதே நிலையில் காட்சி. உற்சவர் வைகுந்தநாதன் என்று பெயர். தாயா வைகுந்த வல்லி. விமானம் ஆனந்த சத்திய வர்த்தக விமானம்.
பகவானது சேவை பரமபதத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறது. அங்கு தேவர்களுக்கு எப்படி காட்சி கொடுத்தாரோ அப்படித்தான் இந்த கோயிலும் காட்சியளிக்கிறார். பெருமாளின் கருணையின் காரணமாக உத்தங்க முனிவருக்கு இத்தலத்தில் மோட்சம் கிடைத்தது. ஹிம்சகன் எண்ணம் கொடிய அரக்கனைத் திருத்துவதற்காக இறைவன், அவனை இத்திருத்தலத்திற்கு வரச்செய்து இங்குள்ள திருக்குளத்தின் நீரை பருக வைத்தார். அந்த புஷ்கரணி நீரை பருகியது 'ஹிம்சகனுடைய' கெட்ட எண்ணங்கள் அவனை விட்டு விலகியது. எவ்வளவுக்கெவ்வளவு கொடிய செயல் புரிந்தானோ அத்துனைக் கத்துனை தர்ம காரியங்களில் இறங்கி நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்து இறைவனது அன்புக்கு பாத்திரமானான். திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸதலம்.
மற்ற திருமால் கோயிலிலுள்ள விமானத்திற்கும் இந்த வைகுண்ட விண்ணகரப் பெருமாள் கோயில் விமானத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விமானத்தின் கிரிவலப் பகுதியில் தென்புறத்தில் நரசிம்மரும், மேற்குப் பக்கத்தில் அரங்கநாதரும், வடக்குப் பக்கத்தில் வைகுண்டநாதர் உருவமும் சுதையில் வடிக்கப்பட்டுள்ளன.
பரிகாரம்
குடும்ப பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், குழந்தைகள் எதிர்காலம் எந்தவித வில்லங்கம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களால் எந்தவித தொல்லை ஏற்படாமல் இருக்கவும், எதிரிகளாலும் உறவினர்களாலும் போட்டி பொறாமை ஏற்படாமல் தடுக்கவும், ஆப்ரேஷன் நல்லபடியாக வெற்றியைத் தரும் பில்லி, சூனியம், ஏவல் இவைகளினால் பாதிக்கப்படாமல் இருக்கவும். இங்கு வந்து பெருமாளை முறைப்படி வேண்டி பிரார்த்தனை செய்தாள் நிச்சயம் எதிர்பார்த்த பலனை அடைய முடியும். அத்தோடு பூமியிலேயே வைகுண்ட தரிசனத்தை காணும் பாக்கியம் ஏற்படும்.