தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயில் Then Thirupperai Temple in Tamil
பிரச்சனைகள் தேவலோகது தேவி மார்களையும் விடுவதில்லை என்பதை புராணங்கள் ஆங்காங்கே கூறுகின்றன. ' பொறாமை' என்பதும், சுயநலம் என்பதும் பெண்களுக்கு உண்டு என்பதையும் இதைப் போக்க முனிவர், பிராட்டியார் ஒருவருக்கு உதவி செய்த கதையும் நடந்திருக்கிறது. அந்த காலத்து வாழ்க்கையில் அரக்கர்களால் தேவர்கள் கஷ்டப்பட்டார்கள். உரிமை போராட்டத்தால் தேவிமார்களுக்கிடையே மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வரலாறு நடந்த இடம் திருபேரையாகும்.
ஆழ்வார் திருநகரிக்கு கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது தென்திருப்பேரை. மூலவர் மகரநெடுங்குழைக்காதர். தேவியர் இருவர். குழைக்காதவல்லித்தாயார், திருப்பேரை நாச்சியார். மூலவருக்கு முன் இரு மருங்கிலும் பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும் உள்ளனர். விமானம் பத்ர விமானம். தீர்த்தம் சுக்கில புஷ்கரணி. நம்மாழ்வாரும், மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்து இருக்கின்றனர்.
பகவான் பூமாதேவியோடு மிகவும் சந்தோசமாக இருப்பதை கண்டு லட்சுமி தேவி வெறுத்தாள். விரக்தியடைந்த அவள் தனது குறையை துர்வாச முனிவரிடம் சொன்னாள். துர்வாச முனிவர் லட்சுமிக்கு உதவ எண்ணி நேராக பகவானிடம் சென்றார். அப்போது பூமாதேவி துர்வாச முனிவரை மதிக்கவே இல்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர், ' நீயும் லட்சுமி தேவியின் துக்க நிலையை அடைவாய்' என்று சாபமிட்டார். இந்த சாபம் எப்போது நீங்கும் என்று பூமாதேவி துர்வாச முனிவரிடம் கேட்டபோது பங்குனி உத்திரத்தின் போது நதியில் நீராடி கொண்டிருக்கும்போது (தாமிரபரணி நதியில்) இரண்டு மீன்வடிவ பொர்குண்டலங்கள் கிடைக்கும். அதை எடுத்து திருமாலுக்கு சாற்றியவுடன் இந்த சாபம் விலகும் என்றார்.
பூமாதேவியின் அதன்படியே நீராடி இந்த திருப்பேரை பெருமாளை வேண்டி தவமிருந்தார் பங்குனி உத்திரத்தன்று பங்குனி பௌர்ணமியின் பொழுது இரண்டு மீன் வடிவ பொர் குண்டலங்கள் கிடைத்தது. அதை பூமாதேவி திருப்பேரை பெருமாளுக்கு அணிவித்து துர்வாச முனிவரின் சாபத்தை போக்கி கொண்டாள் என்பது புராண வரலாறு.
வருணன் சாபம் நீங்கிய ஸ்தலம் என்பதால் மழை இல்லாமல் பஞ்சத்தில் வாடிய விதர்ப்ப தேசத்து அரசன் இங்கு வந்து பெருமாளையும் வருணனையும் வணங்கி பிரார்த்தித்து அதன் பலனாக விதர்ப்ப தேசத்து பஞ்சத்தையும், பட்டினியையும் போக்கினான். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு நீர்முகில் மன்னன் என்று பெயரும் உண்டு.
பரிகாரம்
குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் அனைவரும் இங்கு வந்து பெருமாளை - வருணனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் பஞ்சம் விலகும். யார் விட்ட சாபமும் இன்று வரை சரியாக போகவில்லை என்றால் தென்திருப்பேரை பெருமாளிடம் சரணடைந்து விட்டால் சாபமும் விலகும். பெருவாழ்வு கிடைக்கும்.