திருச்சிரீவரமங்கை வானமாமலை பெருமாள் கோயில் Vanamamalai Perumal Temple in Tamil

 பாவத்தையும்,  தோஷத்தையும் செய்யாதவர்கள் இவ்வுலகில் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள்.  சாதாரண குடிமகனை விட பெரும் பொறுப்பில் இருக்கும் அரசன் மிக அதிகமாகவே செய்ய வேண்டி இருக்கிறது.  இதனால் மிகப்பெரிய தோசத்திற்கு ஆளாகி,  நாய் போல் தெருவில் வலம் வர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.  இருப்பினும் அப்போது கூட திருமாலை   நினைத்தால் அவர்களது கொடிய பாவம் மன்னிக்கப்பட்டு விடும்.  இப்படிப்பட்ட அருமையான சம்பவம் நடந்த இடம் தான் வானமாமலை.

 திருநெல்வேலியிலிருந்து  திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குநேரியில் இறங்கினால் வானமாமலை ஜீயரின் பொறுப்பில் இயங்கி திருச்சுரீவரமங்கை  எனும்  புண்ணிய ஷேத்திரத்தை  அடையலாம்.  மூலவர் தோத்தாத்ரி நாதன்(வானமாமலை)  வீற்றிருக்கும் திருக்கோலம். உத்ஸவர் தெய்வ நாயகன்.  தாயார் உபயநாச்சியார்.  சிரீவர மங்கை தாயார்.  தீர்த்தம் இந்திர தீர்த்தம்,  சேற்று தாமரை தீர்த்தம்.  விமானம்  நந்தவர்த்தன விமானம்.  பிரம்மா,  இந்திரன்,  ரோமசர், ப்ருகு,  மார்க்கண்டேயருக்கு திருமால் நேரிடையாகவே தரிசனம் கொடுத்த ஸ்தலம்.

 இது தானாகத் தோன்றிய ஸ்தலம்.  பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு.  அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள்.   இந்த எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் தீராத வியாதிகள் நீங்கும்.
 மிகப்பெரிய மகரிஷியான  குசாஸனரின்  சாபத்தால்,  சிந்து தேசத்து அரசன் நாயாக மாறி,  இங்கு வந்து தன் பாவத்தையும் ,  சாபத்தையும் போக்கிக் கொண்டான்.  பழைய உருவத்தையும் அடைந்தான்.  பகவான் மதுகைடபரிகள் என்னும் அரக்கர்களை கொன்ற  ரத்தம் பட்ட பூமி தேவி தன் இயல்பான தூய்மையை இழந்தாள்.  அப்போது பகவான் பூமாதேவியின் கெடுதல் பலனை மாற்றி மறுபடியும் தூய்மையாக மாற்றி பூமா தேவிக்கு காட்சி கொடுத்தார்.

 அதனால் தான் இந்த இடம் பூலோக வைகுண்டம் என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றது.  ஊர்வசியும் திலோத்தமையும்   இந்த ஸ்தலத்தில் தவமிருந்து பகவானுக்கு பிரார்த்தனை செய்து பகவான் அருளால் பெருமாளுக்கு இருபக்கமும்  நின்று  வெண்சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.  மணவாள முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட  அஷ்டதிக்  புஜங்களில்  ஒருவர் ஸ்ரீ வானமாமலை  ஜீயர் சுவாமி.  ஒவ்வொரு ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திர தினத்தன்று வானமாமலை ஜீயர் சுவாமிகள் மணிவாள  முனிவர் அணிந்து தங்க மோதிரம் அணிந்து கொண்டு தீர்த்தம் சாதிப்பது வழக்கம்.

 பரிகாரம்

  கஷ்டங்கள் இருக்கும் போது  பாவம் செய்ய தோன்றும்.  எனவே பாவத்தை செய்யாமல் இருக்க நமக்கு கஷ்டம் வரக்கூடாது.  அந்த கஷ்டம் வராமல் இருக்கவும் வந்த அனைத்து கஷ்டங்களும் உடனடியாக  விலகி போகவும்,  நோயாளிகளால் உள்ளமும் உடலும் கெட்டு திண்டாடமல்  இருக்கவும்,  மாணவர்கள் நன்கு படிக்கவும்,  குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும்  நிலைக்கவும் வானமாமலை ஜீயர் கட்டுப்பாட்டில் இயங்கும் கோத்தாரி நாத பெருமாளை வணங்கி,  அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தை உண்டு வந்தால் போதும்.  வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும்.

Quickly Find What You Are Looking For