ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருக்கச்சி Varadharaja Perumal Temple Thirukachi in Tamil

 கோயில்களே வீதிகளாக மாறி இருக்கும் ஸ்தலம் என்று பல ஆண்டுகளாக பெருமையுடன் சொல்லப்படுகின்றது 'காஞ்சிபுரம்'  பற்றி  அறியாதார் யாருமே இருக்க மாட்டார்கள். மூற்காலத்திற்கு  இந்த திருத்தலமே மன்னர்கள் ஆட்சியில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது.  எங்கு திரும்பினாலும் பெருமாள் கோயில்கள்.  பகவான்,  இந்த பூமியில் மனிதர்களுக்குள் மனிதனாக வாழ்ந்து அடியார்களுக்கும்  பக்திமான்களுக்கும்  அருட்கடாட்சம் செய்து வந்து இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ அடிப்படை வரலாறுகள்,  கல்வெட்டுகள் உண்டு.

 அத்திகிரி,  அத்தியூர் -  வாரணகிரி,  பெருமாள் கோயில் என்று பகவானும் அழைக்கப்படும்  சத்யவரத  சேத்திரம் தான் திருக்கச்சி கோயில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு மேற்காக 1050 அடி நீளமும் வடக்கு தெற்காக 675 அடி அகலமும் மிக உயரமான சுற்றுச்சுவரும் 180 அடி உயரமுள்ள 9 நிலை ராஜகோபுரமும்,  மேற்கு 160 அடி உயரம் கொண்ட ஏழுநிலை கோபுரமும் ஐந்து பிரகாரங்களை கொண்டது.  கருவறை 40 அடி உயரத்தில் இரண்டு அடுக்காக 43 படிகள் கொண்டது.  மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நின்ற கோலம்.  தேவப்பெருமாள் பேரருளாளன்,  தேவாதிராஜன் அத்தி வரதன் என்ற வேறு பெயர்களும் உண்டு.

 தாயார்  ஸ்ரீ பெருந்தேவி தாயார்.  விமானம் புண்ணியகோடி விமானம்.    குக விமானத்தின்  கீழ் ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள். தாயார்  அரித்தரா  தேவி தாயார்.  தீர்த்தம் வேதவதி நதி.  வடமேற்கேயுள்ள  ஆனந்தஸரஸ்  திருக்குளம்.  வடமேற்கே  பொற்றாமரை தீர்த்தம். சேஷ வராக தீர்த்தம்.  பிரம்ம தீர்த்தம் மிகப் பழமையான கோயில்.  திருக்கச்சி நம்பிகள்,  மணவாள மாமுனிகள் மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.

 ஐராவதமே மலையுருவில்  எம்பெருமானே தாங்கியது.  எனவே இத்தளத்திற்கு அத்திகிரி என்று பெயர்.  பிரமதேவன் இங்கிருந்து யாகம் செய்தான்.  எம்பெருமானும் பிரம்ம தேவனுக்கு புண்ணியகோடி விமானத்தின் வந்து காட்சி தந்தார்.  பிருகு முனிவர்,  நாரதர்,  ஆதிசேஷன், இந்திரன்,  சரஸ்வதி தேவி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு காட்சி கண்டனர் என்பது முக்கியத்துவம் கொண்டது.  கிருதயுகத்தில் பிரம்மனும்,  திரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபரயுகத்தில் பிரகதீஷ் பதியும்,  கலியுகத்தில் ஆதிசேஷனும் பூஜித்த ஸ்தலம்.  இந்த கோயிலில் உள்ள தங்க பள்ளியை வணங்கினால் வியாதி விலகும் என்பது ஐதீகம்.

 இங்குள்ள ஆனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில்  மூழ்கியிருக்கும் அத்திவரதர் சிலையை நாற்பது வருஷத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள்.  சித்திரை மாதத்தில் 15 நாட்களுக்கு சூரிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில் படும்.  இங்குள்ள சக்கரத்தாழ்வார் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.  ஸ்ரீ  உடையவருக்காக  கண்களை இழந்த கூரத்தாழ்வாருக்கு  எம்பெருமான் கண்களை மீண்டும் கொடுத்த ஸ்தலம்.  ஆதிசேஷன் இங்கு வந்து ஆண்டிற்கு இரு முறை (வைகாசி விசாகம் ஆடி மாத வளர்பிறை தசமி)  இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.  இங்கு நடக்கும் கருட சேவை உலகப் புகழ் பெற்றது.   ஒன்பது ஆழ்வார்கள் இந்த கோயிலை பற்றி  பாசுரம் செய்திருக்கிறார்கள்.

 பரிகாரம்

 மனிதனுக்கு வரக்கூடிய எத்தகைய கஷ்டம் வந்தாலும் சோகங்கள் தொடர் கதையாகி உருவெடுத்து துரத்தினாலும்  புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டாலும் மரண பயம் ஏற்பட்டு மரணம் நெருங்குவது ஆக இருந்தாலும்,  நண்பர்களால்,  எதிரிகளால்,  கூட பிறந்தவர்களால் கடுமையாக பாதிக்கப்படும் அடுத்த நிமிடமே இந்த பெருமானை சரணடைந்து விட்டால் போதும்.  பகவான் எந்த ரூபத்திலாவது வந்து உங்களது அத்தனை  இன்னல்களையும் பொடிப்பொடியாக்கி காட்டி சந்தோசத்தில் வாழ்நாள் முழுவதும் ஆழ்த்துவார்.

Quickly Find What You Are Looking For